ஆள் கடத்தல்: நடிகை புளோரா கைது - சிறையில் அடைப்பு!
ஸ்ரீமன், சொர்ணமால்யா நடித்த ஸாரி, எனக்கு கல்யாணமாயிடுச்சு உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை புளோரா (29). கேரளத்தைச் சேர்ந்தவரான இவரது முழுப் பெயர் புளோரா ஷைனி.
தெலுங்கில் ஆஷா என்ற பெயரிலும், இந்தியில் ஷைனி என்ற பெயரிலும் கன்னடத்தில் மயூரி என்ற பெயரிலும் நடித்து வருகிறார். தமிழில் இப்போது சுத்தமாக வாய்ப்பில்லாமல், தெலுங்கில் மட்டும் சில படங்களில் கிளாமர் வேடங்களில் வந்து போய்க் கொண்டிருக்கிறார்.
இந் நிலையில் ஆள் கடத்தல் வழக்கில் சிக்கி கைதாகியுள்ளார் புளோரா. அமெரிக்க தூதரகத்தில் புளோரா விசா கோரி விண்ணப்பித்திருந்தார். மேலும், தன்னுடன் மேக்கப் கலைஞரான ஸ்ரீலதாவும் (35) வருவதாக கூறி அவருக்கும் விசா கோரியிருந்தார்.
இந்த விண்ணப்பத்தை நேற்று அமெரிக்க தூதரக அதிகாரிகள் பரிசீலித்தனர். இதற்கான நேர்காணலுக்காக புளோராவும், ஸ்ரீலதாவும் வந்திருந்தனர்.
அப்போது நடந்த விசாரணையில் இருவருக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று தெரிய வந்தது. மேலும் விசா தொடர்பாக அவர்கள் கொடுத்த ஆவணங்களும் போலியானவை என்று தெரிய வந்தது.
இதையடுத்து ராயப்பேட்டை போலீஸாருக்கு அமெரிக்க தூதரக அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து போலீஸார் வந்து புளோராவையும், ஸ்ரீலதாவையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் வெங்கட் ரெட்டி. இவர் பணம் வாங்கிக் கொண்டு ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பவர்.
இவரை ஸ்ரீலதா அணுகியுள்ளார். வேலை தேட அமெரிக்க போக உதவ வேண்டும் என்று கேட்டுள்ளார். இதையடுத்து அவரிடம் ரூ. 3 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்ட ரெட்டி, புளோராவிடம் அனுப்பியுள்ளார். புளோரா ஒரு தொகையை கமிஷனாகப் பெற்றுக் கொண்டு தனது மேக்கப் கலைஞர் என்ற போர்வையில் ஸ்ரீலதாவை அமெரிக்காவுககு அனுப்ப திட்டமிட்டார். அதில்தான் அவர் மாட்டிக் கொண்டார்.
இதையடுத்து புளோரா, வெங்கட் ரெட்டி, ஸ்ரீலதா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களை சைதாப்பேட்டை 18வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சமீபத்தில் பாஜக எம்.பி. ஒருவர், மனைவி என்ற பெயரில் ஒரு பெண்ணை வெளிநாட்டுக்கு கடத்த முயன்றபோது விமான நிலையத்தில் வைத்துப் பிடிபட்டார். அப்போது ஆந்திராவைச் சேர்ந்த பலருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது என்பது நினைவிருக்கலாம்.