மதிமுக போட்டியில்லை!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடியும். இந்த நிலையில் அதிமுக கூட்டணி இரு இடங்களில் போட்டியிடுவதாகவும், ஒரு இடத்தில் மதிமுக போட்டியிடும் எனவும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதனால் அரசியல் களத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைகோ போட்டியிடுவார் என முதலில் கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று கட்சியின் ஆட்சி மன்றக் குழுவைக் கூட்டி வைகோ விவாதித்தார். இக்கூட்டத்தில் மதிமுக போட்டியிடலாமா என்பது குறித்து முதலில் விவாதிக்கப்பட்டது.
மேலும் வேட்பாளர்களாக சிலரது பெயரையும் வைகோ கூட்டத்தினர் முன் வைத்தார். இதில் கணேசமூர்த்தி, சம்பத், கலைப்புலி தாணு உள்ளிட்டோர் அடங்குவர். ஆனால் அவர்கள் யாருமே போட்டியிட முன் வரவில்லையாம். இதனால் வேட்பாளர் குறித்து முடிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
மேலும், நமக்கு வெற்றி வாய்ப்புக்கு சுத்தமாக வாய்ப்பே இல்லை. இந்த நிலையில் போட்டியிடாமல் இருப்பதே நல்லது என்று கட்சியின் மூத்த தலைவர்கள் வைகோவிடம் எடுத்துரைத்தனர்.
இதையடுத்து போட்டியிடாமல் விலகிக் கொள்வது என்ற முடிவுக்கு வைகோ வந்தார். இதுதொடர்பாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து மதிமுக வெளியிட்ட செய்திக்குறிப்பில், மார்ச் 26ம் தேதி நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு சீட் கொடுத்ததற்காக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு மதிமுக ஆட்சி மன்றக் குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
இருப்பினும் இத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் அதிமுகவுக்கு 60 எம்.எல்.ஏக்களும், மதிமுகவுக்கு 6 பேரும் உள்ளனர். ஒரு எம்.பி. வெற்றி பெற 34 பேர் தேவை. மீதமுள்ள 26 அதிமுக எம்.எல்.ஏக்களையும், மதிமுகவினரையும் சேர்த்தால் 32 பேர் வருகின்றனர்.
மதிமுக வேட்பாளர் வெற்றி பெற இன்னும் 2 பேர் தேவை. ஆனால் அதைப் பெறுவதில் பெரும் சிக்கல் இருப்பதால்தான் மதிமுக போட்டியிலிருந்து விலகியுள்ளது.
அதிமுகவே போட்டி:
மதிமுகவின் இந்த முடிவு ஜெயலலிதாவுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
இதனால் மதிமுவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அதிமுகவே இரண்டாவது வேட்பாளரை நிறுத்தலாம் என அக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.