உலகிலேயே வயதான பாட்டி மரணம்
மாஸ்கோ: உலகிலேயே அதிக வயதான பெண்ணாக கருதப்படும் ரஷ்யாவைச் சேர்ந்த 117 வயது பாட்டி மரணமடைந்தார்.
ரஷ்யாவைச் சேர்ந்தவர் வார்வரா செமனிக்கோவா. 1890ம் ஆண்டு பிறந்த இவருக்கு 117 வயதாகிறது. உலகிலேயே மிகவும் வயதானவர் இவர்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் அதற்குரிய வயது ஆவணங்கள் இல்லாததால், அவரை உலகிலேயே வயதான பெண்ணாக அங்கீகரிக்க கின்னஸ் நிறுவனம் மறுத்து விட்டது.
ஆனால் வார்வராவின் ஒரு டசன் பேரன், பேத்தி, கொள்ளு பேரன் பேத்திகளும் ரஷ்ய மக்களும் இவரைக் கொண்டாடி வந்தனர். நாடோடி இனத்தில் பிறந்த வார்வரா, வேட்டையாடுதலிலும், மான் வளர்ப்பலும் தனது இளமைக் காலங்களை கழித்தார்.
சைவம், அசைவம் என்று எல்லாவற்றையும் ஒரு பிடி பிடித்தாலும் கூட, படு ஆரோக்யமாக இருந்தார். 2 முறை திருமணம் செய்து கொண்டவர் வார்வரா. இவரது முதல் கணவருக்கு, வார்வராவை விட 27 வயது குறைவாம்.
3 குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்த்துள்ளார் இந்த மூதாட்டி. காது சரியாக கேட்கவில்லை என்றாலும், பாட்டிக்கு ஞாபகத்திறன் ஜாஸ்தி. எதையும் அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டாராம்.
இந்த நிலையில் வார்வரா, ரஷ்யாவின் யகுடியா என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார்.
ஏற்கனவே உக்ரைனைச் சேர்ந்த 116 வயதான கிரிகோரி நெஸ்டர் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் இறந்தார்.
கின்னஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கூற்றுப்படி, போர்ட்டோரிக்கோவைச் சேர்ந்த எமிலியானோ மெர்கடோ டெல்டோரா என்பவர்தான் உலகிலேயே வயதான நபர். இவருக்கு வயது 115. ஆனால், இன்னும் ஸ்டிராங்காக இருக்கிறார் மெர்கடோ.