For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திபெத்தில் கொந்தளிப்பு - சீனாவுக்கு தலாய் லாமா கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

லாசா: திபெத்தில் சுதந்திரம் கோரி நடந்து வரும் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க முயலக் கூடாது என்று சீனாவுக்கு திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா கோரிக்கை விடுத்துள்ளார்.

திபெத்தில் சுதந்திரப் போராட்டம் பெரிய அளவில் வெடித்துள்ளது. திபெத்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள திபெத்தியர்கள், அங்குள்ள சீன தூதரகங்கள் முன்பு பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் திபெத் பிரச்சினை உலக அளவில் மறுபடியும் சூடாக வெடித்துள்ளது.

திபெத் தலைநகர் லாசாவில் நேற்று நடந்த மாபெரும் போராட்டத்தை சீன பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியும், தாறுமாறாக அடித்தும் அடக்கினர். இந்த வன்முறையில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த 20 ஆண்டுகளில் இதுவே மிகப் பெரிய போராட்டம் என்று கூறப்படுகிறது. லாசா நகரமே முற்றிலும் போர்க்களம் போல மாறியிருந்தது. புத்த மத துறவிகள் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி நடத்தினர்.

சீன பாதுகாப்புப் படையினர் நடத்திய பயங்கர தாக்குதலில் இறந்த 10 பேரும் அப்பாவிகள். கொடூரமான முறையில் அவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் 2 பேர் ஹோட்டல் தொழிலாளர்கள், 2 பேர் கடை உரிமையாளர்கள். இறந்தவர்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த யாரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர் முழுவதும் கடைகள், நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன, பல தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. ஏராளமான பேர் காயமடைந்தனர்.

திபெத்திய தலைவர் தலாய் லாமாவின் தூண்டுதலே இந்த வன்முறைக்குக் காரணம் என சீன அரசு குற்றம் சாட்டியுள்ளது.

தலாய் லாமா கண்டனம்:

ஆனால் சீன அரசின் அடக்குமுறையை தலாய் லாமா கடுமையாக கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலைமை மோசமாக இருக்கிறது. இது எனக்குக் கவலை தருகிறது. திபெத்தியர்கள் அமைதியான முறையில் நடத்திய போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கியிருக்கிறது சீன அரசு.

லாசா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். இத்தனை நாட்களாக அடக்கப்பட்டிருந்த மக்கள் இப்போது தங்களது உணர்வுகளை வெளிக்காட்டத் தொடங்கியுள்ளனர்.

சீன அரசின் பிடியிலிருந்து விடுபட வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். இந்த உணர்வுகளை, சுதந்திர வேட்கையை மிருகத்தனமாக அடக்க சீன அரசு முயலக் கூடாது. பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்.

ஆனால் சீன அரசிடம் அத்தகைய போக்கை எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் வேறு வழியில்லை. பேச்சுவார்த்தை நடத்தி, அமைதியான முறையில் பிரச்சினைக்குத் தீர்வு காண சீன அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் தலாய் லாமா.

இந்தியா கவலை:

திபெத் நிலைமை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. திபெத் போராட்டம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், திபெத் நிலவரம் கவலை தருவதாக உள்ளது.

லாசாவில் பெரும் போராட்டம் வெடித்திருப்பதும், அங்கு உயிர்ப் பலி ஏற்பட்டுள்ளதாகவும் வரும் செய்திகள் நிம்மதி தருவதாக இல்லை.

அங்கு அமைதி திரும்ப வேண்டும் என இந்தியா விரும்புகிறது. பேச்சுவார்த்தை மூலமும், அமைதித் தீர்வு மூலமும் பிரச்சினைக்கு முடிவு காணப்பட வேண்டும் என்றார் அவர்.

சீன தூதரகத்தில் திபெத்தியர்கள் முற்றுகை:

இந்த நிலையில் டெல்லியில் உள்ள சீன தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முயன்ற 50 திபெத்தியர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

லாசாவில் சீன பாதுகாப்புப் படையினர் நடத்திய வெறித் தாக்குதலைக் கண்டித்து டெல்லியில் உள்ள சீன தூதரகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்த திபெத்தியர்கள் முயன்றனர். அவர்களில் ஏராளமான பேர் பெண்கள் ஆவர்.

இதனால் தூதரகம் உள்ள சாணக்யபுரியில் பதட்டம் ஏற்பட்டது. பெருமளவில் குவிக்கப்பட்டிருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.

கடந்த 12ம் ேததி திபெத்திய சுதந்திரப் போராட்டம் வெடித்ததன் 49வது தினத்தையொட்டியும், சீன தூதரகத்தை முற்றுகையிட திபெத்தியர்கள் முயன்றனர். அப்போது 36 திபெத் பெண்கள் கைது செய்யப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

அமெரிக்கா கண்டனம்:

திபெத்திய போராட்டம் தீவிரமாக வெடித்திருப்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் செயலுக்கு அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அடக்குவதை விட்டு விட்டு அவர்களுடன் பேச்சு நடத்தி சுமூகத் தீர்வ காண சீன அரசு முயற்சிக்க வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் திபெத் போராட்டம் பெரிதளவில் வெடித்திருப்பது சீன அரசுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

ஒலிம்பிக் போட்டியின்போது தங்களது பிரச்சினையை ெபரிதாக்கினால்தான் உலக நாடுகள் தங்களது 50 ஆண்டு கால போராட்டத்தை உன்னிப்பாக கவனித்து, சீனாவுக்கு நெருக்கடி கொடுத்து பிரச்சினைக்கு முடிவு ஏற்பட உதவும் என்ற எதிர்பார்ப்பில் திபெத்தியர்கள் தங்களது போராட்டத்ைத தீவிரமாக்கியுள்ளதாக கருதப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X