• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புயல் சின்னம் வலுவிழந்தது - இன்றும் மழை பெய்யும்

By Staff
|

Cyclone
சென்னை: அரபிக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இன்றும் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் எனவும் அது தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தில் பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பை சந்தித்தது. லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கின. விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில் தென் கிழக்கு அரபிக் கடரில் கேரள கடற்கரைக்கு அப்பால் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் அதே இடத்தில் அது நிலை கொண்டிருப்பதால் தமிழகம் மற்றும் புதுவையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 8 செமீ மழையும், பாம்பன், ராதாபுரத்தில் 7 செமீ மழையும் பெய்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் பலி:

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர்.

மாங்குடி என்ற ஊரைச் சேர்ந்த மாரியப்பன் நாடார் மகள் சீதாலட்சுமி (17) மற்றும் முருகேசன் என்பவரது மகளான 18 வயது முத்துச் செல்வி ஆகியோர் மேலும் 3 பெண்களுடன் தேவியாற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் சீதாலட்சுமி உள்ளிட்ட 5 பெண்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதில் சீதாலட்சுமியும், முத்துச் செல்வியும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. மற்ற 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பலி 26 ஆனது:

இதற்கிடையே தமிழகத்தில் மழை வெள்ளத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 26யைத் தொட்டுவிட்டது.

நாகப்பட்டினம் மற்றும் கோவை மாவட்டங்களில் தான் அதிகபட்சமாக தலா 4 பேர் பலியாகியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

தூத்துக்குடி, தஞ்சை, விருதுநகர், விழுப்புரம் மாவட்டங்களில் தலா 2 பேர் பலியாகியுள்ளனர். புதுக்கோட்டை, திருச்சி, கன்னியாகுமரி, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர்.

கலங்கிப் போன கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் கடந்த பத்து நாட்களாக பெய்து வரும் அடை மழையால் கதி கலங்கிப் போயுள்ளது. திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை எந்த கோடை காலத்திலும் இல்லாத அளவுக்கு இந்தமுறை கன்னியாகுமரியில் தொடர்ந்து அடை மழை பெய்து வருகிறது. கடந்த பத்து நாட்களாக தினசரி பல மணி நேரத்திற்கு மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்துப் போனது.

ஏராளமான பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது. பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

தக்கலையில், புனித சந்தியாகப்பர் கிறிஸ்தவ ஆலயத்தின் கூரை மீது மின்னல் தாக்கியது. இதில் கூரை ஓடுகள் பலத்த சப்தத்துடன் சிதறின. இதில் மின்சார வயர்களும் கருகி சேதமடைந்தன. இருப்பினும் அப்போது சர்ச்சுக்குள் இருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

கடலும் கொந்தளிப்புடன் காணப்படுவதால் கன்னியாகுமரி, திருவள்ளுவர் சிலைக்குப் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரிக்கு வந்துள்ள வெளிநாட்டு, வெளியூர் சுற்றுலாப் பயணிகள் வேறு எங்கும் போக முடியாமல் முடங்கிக் கிடக்கின்றனர்.

வைகையில் வெள்ளம்:

மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நேற்று சற்று மழையின் அளவு தணிந்திருந்தது. இருப்பினும் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சிம்மக்கல், ஆரப்பாளையம், ஓபுளா படித்துறை ஆகிய இடங்களில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போலீஸாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

நெல், மிளகாய், வெங்காயம் நாசம்:

கனமழையால் ஓட்டப்பிடாரம் தாலுகாவில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்யப்பட்டிருந்த நெல், மிளகாய், வெங்காயம், கத்தரி நாசமானது.

கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் கனமழையால் ஓட்டப்பிடாரம் தாலுகாவில் 1140 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் முழுவதும் நாசமானது.

இதுபோல் 215 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய் செடிகளில் பழம் பறிக்கும் நிலையில் நாசமானது. 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம், கத்தரி உள்ளிட்ட மற்ற பயிர்களும் நாசமானது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X