தர்மபுரி மாவட்டத்தில் மீண்டும் போலீஸ் துப்பாக்கி கொள்ளை
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் போலீஸ்காரரின் துப்பாக்கி கொள்ளை போயுள்ளது. இதனால் தர்மபுரி மாவட்ட காவல்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் சில வாரங்களுக்கு முன்பு 6 துப்பாக்கிகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக அந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைத்துக் காவலர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ளது யார் என்பது இன்னும் தெரியாத நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் மீண்டும் ஒரு போலீஸ் துப்பாக்கி கொள்ளை போயுள்ளது.
பென்னாகரம் காவல் நிலையம் அருகே உள்ளது சார்நிலைக் கருவூலம். இங்கு நடராஜன் என்ற போலீஸ்காரர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று இரவுப் பணியில் அவர் இருந்தார்.
அப்போது தனது துப்பாக்கியை வைத்து விட்டு சாப்பிடச் சென்றார். சாப்பிட்டு விட்டுத் திரும்பியபோது துப்பாக்கியைக் காணாமல் திடுக்கிட்டார். அவர் துப்பாக்கியை வைத்து பூட்டி விட்டுச் சென்ற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து பென்னாகரம் காவல் நிலையத்தில் நடராஜன் புகார் கொடுத்தார். தகவல் அறிந்ததும் டிஐஜி செண்பகராமன், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டோர் வந்து விசாரணை நடத்தினர்.
மீண்டும் போலீஸ் துப்பாக்கி கொள்ளை போன சம்பவம் தர்மபுரி காவல்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பென்னாகரம் போலீஸார் காணாமல் போய் விட்ட துப்பாக்கியை தீவிரமாக தேடி வருகின்றனர்.