அரசுப் பள்ளியில் சமூக விரோதிகள் கும்மாளம்!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே ஊராட்சி ஓன்றிய பள்ளியில் கதவை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது. இந்த பள்ளியை இரவில் சமூக விரோதிகள் பார் ஆக பயன்படுத்துவதாகவும் ஆசிரியைகள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருச்செந்தூர் டிபி ரோட்டில் ஊராட்சி ஓன்றிய கற்றலின் இனிமை பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 182 சிறுவர், சிறுமியர் படித்து வருகின்றனர். 5 ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளிக்கு இரவு காவலர்கள் கிடையாது.
நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்தபோது அறை கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து ஆசிரியைகள் அதிர்ச்சியடைந்தனர். அறையில் இருந்த பிரோவில் இருந்து புக் மற்றும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தன.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை பாக்கியசீலி திருச்செந்தூர் போலீசில் புகார் கொடுத்தார். திருட முயற்சி நடந்த இடத்தை கல்விக்குழு தலைவர் மகேந்திரன் பார்வையிட்டார். ஏற்கனவே இப்பள்ளியில் சமூக விரோதிகள் நுழைந்து மதுகுடித்து விட்டு டேப் ரிக்கார்டர் ஆம்ப்ளிஃபையர், அடிபம்புகளை திருடியுள்ளனர்.
இதுபோன்ற சமூக விரோத சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக ஆசிரியைகள் தெரிவித்தனர்.