நாமக்கல்லில் வன்முறை-பதற்றம்: பஸ்கள் உடைப்பு

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஒன்றியத்தில் நேற்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை பெயர் பலகை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கொடியேற்று விழாவில் கலந்து கொள்வதற்காக கொங்கு இளைஞர் பேரவையின் மாநில அமைப்பாளர் தனியரசு காரில் வந்து கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல கார்களில் வந்து கொண்டிருந்தனர்.

அதில் ஒரு கார் பூசாரிபாளையம் அருகே வந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரின் பைக் மீது மோதியது. இதைத் தொடர்ந்து அந்த ஊர்க்காரர்களுக்கும், கொங்கு இளைஞர் பேரவையினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இரு தரப்பினரும் அரிவாள், உருட்டுக் கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.

இதில் பூசாரிபாளையத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (18), மாரப்பன் (57), ராஜேந்திரன் (27), பொங்காளி (40), ஸ்டாலின், செல்லம்மாள் (55), சரசு உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கிருந்த மளிகை கடை, 2 வீடுகள் மற்றும் இருசக்கர வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் அறிந்த அக்கம் பக்கத்து கிராமத்தினர் பூசாரி பாளையம் விரைந்து வந்தனர். இதனால் பெரிய அளவில் மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது.

மோதல் குறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜான்நிக்சல்சன், பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், தாசில்தார் ஈஸ்வரன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்தனர். அவர்கள் தனியரசு மற்றும் இளைஞர் பேரவையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியனர் தனியரசு சமரசம் அடையவில்லை.

திடீரென பேரவையினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி அனைவரையும் விரட்டியடித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பரமத்திவேலூர் போலீசார் வழக்குபதிவு செய்து இளைஞர் பேரவையின் மாநில அமைப்பாளர் தனியரசு மற்றும் பேரவையைச் சேர்ந்த 38 பேரை நள்ளிரவில் கைது செய்தனர்.

சேலம், நாமக்கல்லில் வன்முறை:

இந் நிலையில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியரசின் ஆதரவாளர்கள் நள்ளிரவில் அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

பரமத்தி வேலூர் 4 ரோட்டில் மதுரையில் இருந்து சேலம் நோக்கி வந்த 4 அரசு பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இதில் பஸ் கண்ணாடிகள் உடைந்து சுக்கு நூறானது.

இந்த கல்வீச்சில் பஸ்சில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் சிலர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வேன் மீதும் கல்வீசி தாக்கப்பட்டது.

சேலம் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் 14 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன. ஓமலூர்-கரூப்பூர் மேம்பாலம், தீவட்டிபட்டி, பண்ணப்பட்டி பிரிவு ரோடு ஆகிய இடங்களில் 7 அரசு பஸ்கள் மீது கல் வீசப்பட்டன. இதில் அந்த பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன.

அதேபோன்று ஆட்டையாம்பட்டி, ராகிபட்டியில் 4 பஸ்களும், காரிப்பட்டியில் 2 பஸ்களும், கொண்டலாம்பட்டி, வேம்படிதாளம் பிரிவு ரோட்டில் ஒரு பஸ் மீதும் கல்வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர்.

பின்னர் மாற்று பஸ்களில் பயணிகளை ஏற்றி அனுப்பிவைத்தனர். இதனால் பயணிகளுக்கு தாமதமும், பெரும் சிரமமும் ஏற்பட்டது.

இந்த கலவரத்தைத் தொடர்ந்து சேலம், நாமக்கல் மாவட்டங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

மோதல் நடந்த பரமத்திவேலூர் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதிரடிப்படையினரும் கலவரத் தடுப்பு போலீஸாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கரூரில் தடியடி - பலர் கைது:

இந்த நிலையில், கரூரில் போலீஸ் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் செய்த கொங்கு வேளாளர் பேரவையினர் மீது போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர்.

இன்று காலை கரூர் தாலுகா அலுவலகம் முன்பு அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் திடீரென கூடினர். போலீஸாரைக் கண்டித்து கோஷம் போட்டனர்.

தகவல் அறிந்த கரூர் டிஎஸ்பி அரவிந்த், கரூர் இன்பெக்டர் முத்துகருப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

கோஷமிட்டவர்களை அமைதியாக கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போலீசாருக்கு எதிராக கோஷம் போட்டனர். இதனால் கோஷம் போட்ட நபர்களை சட்டையைப் பிடித்து போலீசார் இழுத்துச் சென்றனர். மேலும் தடியடியும் நடத்தப்பட்டது.

பெண்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர். இந்த சம்பவத்தால் கரூரிலும் பதட்டம் நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+