'காந்தஹார்'-அத்வானிக்கு தெரியாதா?-சோனியா
ஜெய்ப்பூர்: காந்தஹார் விமான கடத்தலில் பயணிகளை மீட்க தீவிரவாதிகளுடன் ஜஸ்வந்த்சிங் சென்றது தெரியாது என அத்வானி சொல்லியிருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது என, காங்கிரஸ் தலைவர் சோனியா கிண்டலடித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்த காங்கிரஸ் தலைவர் சோனியா, துங்கார்பூர் மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:
காந்தஹாருக்கு இந்திய விமானம் கடத்தப்பட்டபோது உள்துறை அமைச்சராக இருந்தவர் அத்வானி. பயணிகளை மீட்பதற்காக தீவிரவாதிகளுடன் அப்போதைய வெளியுறவு துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், காந்தஹாருக்கு சென்றார்.
ஜஸ்வந்த் சிங் காந்தஹார் சென்ற விஷயம் தனக்கு தெரியாது என்று அத்வானி இப்போது கூறியுள்ளார். இது ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது. அவருக்கு தெரியாமல் இது எப்படி நடந்திருக்கும்?.
அத்வானிக்கு தெரியாமல் நடந்தது என்றால், அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு, அத்வானி மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தமா?
இந்த விஷயம் தொடர்பாக, பாஜக தரப்பில் இருந்து முரண்பட்ட கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
ஆனால், காந்தஹார் விமானக்கடத்தல் பற்றிய அனைத்து விஷயங்களும், அத்வானிக்கு தெரியும் என அப்போது ராணுவ அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில், ஜஸ்வந்த் சிங் தொடர்ந்து மவுனம் சாதிக்கிறார். உண்மையில் என்ன நடந்தது என்பதை, யார் மூலமாக தெரிந்து கொள்வது? எதற்காக உண்மையை மறைக்கின்றனர் என தெரியவில்லை.
பயங்கரவாதம், தேசியம் பற்றி பாஜக அதிகமாக பேசி வருகிறது. ஆனால், இதற்காக அந்த கட்சி இதுவரை உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை என்றார் சோனியா.
நாளை தமிழகம் வருகை:
ராஜஸ்தான் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு காரைக்குடி விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டுக்கு நாளை சோனியா வருகிறார்.
விமானம் மூலம் திருச்சிக்கு மதியம் 2.40 மணிக்கு வருகிறார். அங்கு தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. சோனியா வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அகதி முகாம்கள் 'சீல்':
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் அகதிகள் முகாம்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
அகதிகள் யாரும் வெளியே செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அகதிகள் முகாம்களில் இருக்கிறார்களா என்பது குறித்து காலை, மாலை நேரங்களில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். கடலோரத்தில் சந்தேகமான நபர்கள் சுற்றிதிரிகின்றனரா என்பதை கண்காணிக்க கடலோர போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காரைக்குடி விழாவில் கலந்து கொண்டுவிட்டு ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு சோனியா செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் டில்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.