தமிழகத்தில் கன்னடர்களுக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது
சென்னை: ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு கர்நாடகம் எதிர்ப்பு தெரிவிப்பதைக் கண்டித்து தமிழகத்தில் நடந்து வரும் போராட்டம் வேகம் பிடித்து வருகிறது. நேற்றும் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்கள் நடந்துள்ளன.
விழுப்புரத்தில் நேற்று பெங்களூரிலிருந்து வந்த 2 கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை தமிழர் உரிமை கூட்டமைப்பு, தமிழர் தேசிய இயக்கம், மனித உரிமை இயக்கம் ஆகியவற்றைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறை பிடித்தனர். பின்னர் பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் பேருந்துகளின் கண்ணாடிகளை கட்டையால் அடித்து உடைத்தனர். டயர்களிலும் காற்றைப் பிடுங்கி விட்டனர்.
விரைந்து வந்த போலீஸார் அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
ஓசூரில், பஸ் நிலையத்தில் 3 கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் காற்று இறக்கி விடப்பட்டது. கன்னட எழுத்துக்களின் மீதும் தார் பூசப்பட்டது.
சென்னையில் ஹோட்டல்கள் சூறை:
சென்னையில் நேற்றும் கன்னடர்களுக்குச் சொந்தமான ஹோட்டல்கள் தாக்கப்பட்டன. நுங்கம்பாக்கத்தில் உள்ள ராஜ்பவன் ஹோட்டலுக்கு 2 ஆட்டோக்கள் நிறைய வந்தவர்கள் உள்ளே புகுந்து சரமாரியாக அடித்து தாக்கினர். இதனால் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் பயந்து போய் ஓடினர்.
தாக்குதலில் ஹோட்டலே சின்னாபின்னமானது. சேர்களும், டேபிள்களும் சேதமடைந்தன. கண்ணாடிகளும் உடைந்து சிதறின.
பின்னர் அந்தக் குழுவினர் புரசைவாக்கம் வெல்கம் ஹோட்டலுக்குப் போய் அடிக்க முற்பட்டனர். ஆனால் அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார் அனைவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
தி.நகரில் உள்ள டாடா உடுப்பி ஹோட்டலில் ஒரு கும்பல் தாக்குதலில் இறங்கியது. உள்ளே புகுந்து சரமாரியாக அடித்து நொறுக்கினர். ஒருவர் பல் போடும் கம்ப்யூட்டரைத் தூக்கிக் கொண்டு வெளியில் வந்து ஆவேசமாக கண்ணாடிக் கதவில் எறிந்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இதில் அந்தக் கம்ப்யூட்டர் சுக்கு நூறாக சிதறிப் போனது.
சென்னையில் கன்னடர்களுக்குச் சொந்தமான ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.