For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சர்ச் மீது தாக்குதல்: நார்வேயிடம் புலிகள் முறையீடு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு: மன்னார் மாவட்டத்தில் மடு தேவாலயம் மீதான சிங்களப் படைகள் தாக்குதலை நார்வே அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று விடுதலைப்புலிகள் கோரியுள்ளனர்.

இது தொடர்பாக நார்வே அமைதித்தூதர் எரிக் சொல்ஹெய்முக்கு விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அனுப்பியுள்ள கடிதத்தில்,

ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தமிழரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புனிதத் தலம் ஒன்றைச் சிதைத்து அழிப்பதில் சிங்கள அரசு காட்டும் தீவிரம் பற்றி இந்தக் கடிதம் மூலம் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

கடந்த ஒரு வருட காலமாக வன்னியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் ஒரு பெரும் போரை சிங்கள அரசு எம்மீது தொடுத்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

வன்னியின் மேற்குப் பகுதியான மன்னார் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க மடு தேவாலயப் பகுதியை குறிவைத்து சிங்கள இராணுவம் தாக்குகிறது.

மடு தேவாலயம் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஒரு திருத்தலம். மத வேறுபாடில்லாமல் தமிழ் மக்கள் அனைவராலும் வணங்கப்படும் புனிதத் தலமாக இந்த தேவாலயம் விளங்குகிறது.

போரால் இடம்பெயர்ந்த மக்கள் மத வேறுபாடு இல்லாமல் தஞ்சமடையும் ஒரு பாதுகாப்பு இடமாகவும் மடுத் தேவாலய வளாகம் இருந்து வந்தது.

மத நல்லிணக்கத்துக்கும், மக்களின் சகிப்புத் தன்மைக்கும் சின்னமாகத் தமிழர் நிலத்தில் இருந்துவரும் இந்தப் புனித ஆலயத்தை சிதைத்து அழிக்கும் வெறித்தனத்துடன் கடந்த சில வாரங்களாக இதன் மீது சிங்களப் படைகள் குண்டுமழை பொழிகின்றன.

ஒரு புனித ஆலய வளாகத்தை ராணுவ இலக்காகக் கருதி அதனை நோக்கிப் படை குவிப்பும் குண்டுத் தாக்குதல்களும் நடைபெறுகின்றன.

இந் நிலையிலும் உலக நாடுகள் இந்த அராஜகத்தை தடுத்து நிறுத்தவோ, கண்டிக்கவோ முன்வராதிருப்பது தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கனரக பீரங்கிகளாலும், ராக்கெட் குண்டுகளாலும் இந்த தேவாலயத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடக்கிறது.

கண்மூடித்தனமான இந்த தாக்குதல்களால் அங்கு தஞ்சமடைந்திருந்த ஆயிரக்கணக்கான மக்களும் ஆலய மதகுருமார்களும் புகழ்மிக்க மடு மாதா சிலையுடன் இடம்பெயர வேண்டிய வரலாற்றுத் துயரம் நடந்துள்ளது.

புனித ஆலயத்தின் ஒருபகுதி சிங்களப் படைகளின் குண்டுத் தாக்குதல்களால் சிதைந்து விட்டது. தாக்குதல்கள் தொடர்வதால் ஆலய வளாகம் முற்றிலும்அழிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

இந்நிலையில், சமாதானத் தூதுவரான உங்கள் மூலம் நார்வே அரசுக்கு ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகிறோம்.

மடு புனித ஆலயப் பகுதி மீது சிங்களப் படைகள் நடத்தும் தாக்குதலை உடனடியாக நிறுத்த நார்வே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலக நாடுகளுடனும் வரலாற்றுப் புனித வழிபாட்டுத்தலங்களை பேணிப் பாதுகாக்கும் அமைப்புக்களுடனும் ஒன்றிணைந்து மடு ஆலயம் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை நோர்வே அரசு எடுக்கவேண்டும் என எமது இயக்கம் எதிர்பார்க்கிறது.

பௌத்த சின்னங்களையும் பௌத்த விகாரைகளையும் பாதுகாப்பதிலும் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் அவற்றை நிறுவுவதிலும் இலங்கை அரசு பெரும் முயற்சி எடுக்கிறது.

அதேசமயத்தில், பிற மதங்களின் புனிதச் சின்னங்களை சிதைக்கவும், அந்த மதத்தினரை புண்படுத்தும் வகையில் பௌத்த அடிப்படைவாதக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதிலும் தீவிரம் காட்டுகிறது.

நார்வே அரசு வகித்துவரும் சமரசநிலையை எங்கள் இயக்கம் தொடர்ந்து மதிக்கின்றது. எனவே எங்கள் கோரிக்கையை நார்வே அரசிடம் முன்வைப்பதற்கு எங்களுக்கு உரிமையுள்ளதாகவே நம்புகிறோம்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X