For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓகேனக்கல்: கருணாநிதியின் முடிவு சரியல்ல-ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு ஓகேனக்கல் திட்டம் பற்றி அம் மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தது சரியல்ல என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

மதுரையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழ்நாடு உழவர் பேரியக்கம் என்ற அமைப்பை தொடங்கி மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளை சந்தித்து வருகிறோம். ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கப்பட்டு இந்த இயக்கத்தின் கூட்டங்கள் பிப்ரவரி மாதம் சென்னையிலும், மார்ச்சில் கோவையிலும் நடந்தன. இன்று மதுரையில் கூட்டம் நடத்தப்படுகிறது.

இதில் மதுரை உள்பட 6 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.

விவசாய உற்பத்தி வளர்ச்சி இந்தியாவில் குறைந்து கொண்டே போகிறது. வெளிநாடுகளை பொறுத்தவரை விவசாயிகளுக்கு அதிக மானியம் கொடுக்கிறார்கள்.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி மட்டும் தீர்வாகாது. விவசாய விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 60 ஆண்டுகளில் விவசாயத்துறைக்கு வழங்கப்பட்டுள்ள கடன்கள் மற்றும் பிற துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்கள் எவ்வளவு என்று மத்திய, மாநில அரசு பட்டியல் வெளியிட வேண்டும்.

அதே போல் கடந்த மாதம் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளச் சேதத்திற்கு 3 நாட்களில் புள்ளி விவரம் சேகரித்து நிவாரணத் தொகை வழங்கி இருக்க வேண்டும். ஆனால் மத்திய குழு மிகவும் தாமதமாக வெள்ள சேதத்தை கணக்கிட வந்துள்ளது. இதனால் விவசாயிகள் நிவாரணம் பெறுவதில் இடைத் தரகர்கள் புகும் நிலை உருவாகி விடும்.

ஓகேனக்கல் குடிநீர் திட்டத்தை கடந்த 1997ம் ஆண்டிலேயே நிறைவேற்ற கர்நாடக அரசுடன் ஒப்புதல் செய்யப்பட்டது. அப்போது அதன் திட்ட மதிப்பீடு ரூ.576 கோடியாக இருந்தது. 1998ம் ஆண்டில் விரிவான மதிப்பீட்டின் அடிப் படையில் ரூ.1,008 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டது.

அந்த திட்டத்தை ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அப்போதைய வாஜ்பாய் அரசு அணுகுண்டு சோதனை நடத்தியதன் மூலம் அந்த திட்டம் தடைப்பட்டது.

தமிழ்நாட்டில் கிருஷ்ணா, வீராணம், கோவை, மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய குடிநீர் திட்டங்களுக்கு தமிழக அரசு தான் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஓகேனக்கல் குடிநீர் திட்டத்தில் மட்டும் ஜப்பான் நிதி உதவியை எதிர்பார்த்தது சரியில்லை.

பெங்களூர், ஓகேனக்கல் ஆகிய 2 குடிநீர் திட்டங்களும் ஒரே நேரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டவை. கர்நாடக அரசு பெங்களூர் குடிநீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி விட்டது. ஆனால் தமிழக அரசு 10 ஆண்டுகளாக தூங்கி விட்டது.

காவிரி பிரச்சினையிலும் இதே நிலை தான். பெரியாறு அணை பிரச்சினையிலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த அப்போதைய அதிமுக அரசு உத்தரவு பிறப்பிக்க தவறியது. தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினை தீர்க்க முடியாமல் போனதற்கு திமுக-அதிமுக அரசுகள் தான் காரணம்.

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு ஓகேனக்கல் திட்டம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று முதல்வர் கருணாநிதி எடுத்த முடிவு சரியானதல்ல. இந்த பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டம் முடியாவிட்டாலும், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தையாவது கூட்டி தனது முடிவை அறிவித்திருக்க வேண்டும்.

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா ஓகேனக்கல் பிரச்சினைக்காக தான் உச்சநீதிமன்றம் செல்ல போவதில்லை என்று கூறியுள்ளார். ஆனால் அவர் முதல்வராக இருந்தபோது காவிரி பிரச்சினைக்காக பலமுறை உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார்.

நீதிமன்றத்தை மதிக்காமல் செயல்பட்ட அவர் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கும் ஆளானவர். அவரது பேச்சை நம்ப முடியாது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திடீர், திடீரென்று சட்டசபைக்கு வந்து செல்வது சரியில்லை. பொறுப்புள்ள எதிர்க் கட்சி தலைவராக இருந்து அவர் சட்டசபைக்கு வந்து பொது மக்கள் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X