For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இடஒதுக்கீடு: இனிப்பு வழங்கி கொண்டாடுங்கள்-ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு பல்வேறு கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம், வசதி படைத்த பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்ற கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இட ஒதுக்கீடு தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த தலைவர்களில் ஒருவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். தீர்ப்பு குறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக நீதியை எட்டும் பயணத்தில் இது இன்னும் ஒரு வெற்றி.

இந்த வெற்றியை மாநிலம் முழுவதும் பாமகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன்.

இருப்பினும் இட ஒதுக்கீட்டின்போது கிரீமி லேயர் எனப்படும் வசதி படைத்தவர்களை சேர்க்கக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளது மிகவும் அபாயகரமானது.

அரசியல் சட்டத்தில் எங்குமே, வசதி படைத்த பிற்படுத்தப்பட்டோர், வசதி இல்லாத பிற்படுத்தப்பட்டோர் என்ற பாகுபாடு இல்லை. எனவே அரசியல் அனைத்தும் இந்த கருத்தை எதிர்க்க வேண்டும். இதற்கு நிவாரணம் காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சட்டசபையில் இனிப்பு வழங்கிய பா.ம.க:

நேற்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி சட்டசபையில் பேசுகையில், உயர் கல்வி நிறுவனங்களில் இந்த கல்வி ஆண்டு முதலே பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம் என்ற மகிழ்ச்சியான தீர்ப்பை அளித்துள்ளது.

இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பா.ம.க. சார்பிலும் இதற்காக ஒரு சிறப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள பா.ம.க. சார்பில் அனைவருக்கும் இனிப்பு வழங்குகிறோம் என்றார்.

இதைத் தொடர்ந்து சட்டசபையில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

சு. சுவாமி கூட வரவேற்பு:

தீர்ப்பு குறித்து ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறுகையில், இதன் மூலம் இந்துக்களின் ஒற்றுமை வலுப்படும். அதேசமயம், கிரீமி லேயர் பிரிவையும் இட ஒதுக்கீட்டு வட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும். மேலும் அனைத்து மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் சீட்களின் எண்ணிக்கையை கூட்ட வேண்டும்.

உச்சநீதிமன்றத்தை அனைவரும் சேர்ந்து ஒருமனதாக ஏற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன் என்று கூறியுள்ளார் சுவாமி.

திருப்புமுனை-காங். தலைவர் கிருஷ்ணசாமி

தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளில் இது ஒரு திருப்புமுனையாகும்.

வருகிற கல்வியாண்டு முதலே இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் கூறியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்து ஓயாத ஆதரவைத் தந்து வந்த முதல்வர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X