For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாயுடுவின் பாச்சா பலிக்காது: என்.டி.ஆர். மகள்

By Staff
Google Oneindia Tamil News

Purandeswari
ஹைதராபாத்: எனது சகோதரர்கள் என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா, ஹரிகிருஷ்ணா, அவரது மகனும், நடிகருமான ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோரை தன் பக்கம் இழுக்க நினைக்கிறார் சந்திரபாபு நாயுடு. ஆனால் அது நடக்காது என்று மறைந்த என்.டி.ராமாராவின் மகளும், மத்திய இணை அமைச்சருமான புரந்தரேஸ்வரி கூறியுள்ளார்.

ஆந்திராவில் சிரஞ்சீவி புதுக் கட்சி தொடங்கப் போவதால் மற்ற அனைத்துக் கட்சியினரும் தங்களது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ளவும், கட்சியைப் பலப்படுத்தவும் ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு, 3வது அணியின் ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பலத்துடன், இப்போதே கட்சியை ஸ்டெடி ஆக்கும் வேலையில் இறங்கியுள்ளார். இடதுசாரிகளின் ஆதரவு தெலுங்கு தேசத்திற்கு உறுதி என்று கூறப்படுகிறது.

இதையடுத்து என்.டி.ஆர். குடும்பத்தினரை தன் பக்கம் இழுக்க சந்திரபாபு நாயுடு முயற்சிகளைத் தொடங்கியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும், முதல்வர் பதவியிலிருந்தும் அதிரடியாக என்.டி.ஆர். கழற்றி விட்டு, அந்த இடத்திற்கு வந்தவர் சந்திரபாபு நாயுடு. அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமலேயே காலமானார் என்.டி.ஆர்.

அதன் பின்னர் என்.டிஆர். குடும்பத்திற்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே சொல்லிக் கொள்ளும்படி உறவு இல்லை.

இந்த நிலையில், சமீப காலமாக என்.டிஆர். குடும்பத்தோடு தனது உறவை நெருக்கமாக்கிக் கொள்ள ஆரம்பித்துள்ளார் சந்திரபாபு நாயுடு. அதன் ஒரு கட்டமாக என்.டிஆரின் மூத்த மகன் ஹரிகிருஷ்ணா, அவரது மகன் ஜூனியர் என்.டி.ஆர். (இவர் 2வது மனைவியின் மகன்), நடிகர் என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா உள்ளிட்டோரை வீட்டுக்கு வரவழைத்து விருந்தளித்துள்ளார்.

அப்போது தெலுங்கு தேசம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும். இது நமது கட்சி. இப்போது நல்ல வாய்ப்பு வந்துள்ளது. அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும். நீங்கள் கட்சிக்காக பிரசாரம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாராம் நாயுடு. அவர்களும் பரிசீலிப்பதாக சொல்லி விட்டுச் சென்றுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து என்.டிஆரின் மகளும், மத்திய இணை அமைச்சருமான புரந்தரேஸ்வரி கூறுகையில், சந்திரபாபு நாயுடு தலைமையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி என் தந்தை உருவாக்கிய உண்மையான தெலுங்கு தேசம் அல்ல.

சந்திரபாபு நாயுடு குறுக்கு வழியில் என் தந்தையிடமிருந்து ஆட்சியைப் பறித்து அவருக்கு அவமானத்தை ஏற்படுத்தாமல் இருந்திருந்தால் எனது தந்தை இன்னும் 10 ஆண்டுகள் சந்தோஷமாக உயிர் வாழ்ந்திருப்பார்.

சந்திரபாபு நாயுடுவால் என் தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தையும், அவர் அடைந்த மனவேதனையையும் என்னால் எப்போதுமே மறக்க முடியாது.

மனிதர்களை தேவைக்கு ஏற்ப உபயோகித்துக் கொண்டு சாப்பிட்டபின் கறிவேப்பிலையை தூக்கி எறிவது போன்ற சுபாவம் கொண்டவர்தான் சந்திரபாபுநாயுடு. அவர், தோல்வி பயத்தால் சினிமா கிளாமரை உபயோகிக்கப் பார்க்கிறார்.

என் சகோதரர்களும், அவர்களது மகன்களும் சந்திரபாபு நாயுடு விரிக்கும் வலையில் சிக்கமாட்டார்கள். தெலுங்கு தேசத்திற்காக எனது சகோதரர்கள் பிரசாரம் செய்வார்கள் என்பது குறித்து அவர்களாக அறிவிக்கும் வரை நான் நம்ப மாட்டேன்.

என் குடும்பத்தினர் என்னை ஒதுக்கி வைத்து விட்டார்கள் என்பதையும் நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். குடும்பத்திற்கும் அரசியலுக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு எதுவரை என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்று கூறியுள்ளார்.

மற்றொரு பக்கம், என்.டி.ஆர். கடைசி காலத்தில் கல்யாணம் செய்து கொண்ட லட்சுமி சிவபார்வதி, காங்கிரஸ் பக்கம் தாவ முயன்று வருகிறார். சமீபத்தில் முதல்வர் ஒய்.எஸ்.ராஜேசகர ரெட்டியை அவர் வெகுவாக புகழ்ந்திருந்தார். ஒய்.எஸ்.ஆர் வடிவில் என்.டி.ஆரைப் பார்க்கிறேன் என்று உருகியிருந்தார். எனவே அவர் மூலம் நாயுடுவுக்கு நெருக்கடி கொடுக்க ரெட்டி முயலலாம் என்று கூறப்படுகிறது.

எனவே விரைவில் ஆந்திர அரசியலில் என்.டி.ஆர். குடும்பத்தை மையமாக வைத்து மீண்டும் ஒரு அரசியல் புயல் வீசக் கூடும் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X