தமிழகத்தின் 10வது மாநகராட்சி ஆகிறது தூத்துக்குடி

தமிழகத்தில் ஏற்கனவே சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாநகராட்சிகள் உள்ளன. வேலூர் மாநகராட்சியாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடியும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 10 ஆக உயருகிறது.
இதுகுறித்து சட்டசபையில் நேற்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக தூத்துக்குடி விளங்குகிறது. பெருகி வரும் தொழிற்சாலைகளாலும், வளர்ந்து வரும் துறைமுகத்தாலும், அமையவுள்ள சேது சமுத்திரக் கால்வாய் மற்றும் பல்வேறு தொழிற்சாைலகளாலும், இந் நகரிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது.
ஆகவே தூத்துக்குடி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
கவுன்சிலர்கள் வரவேற்பு: அமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து தூத்துக்குடியில், நகராட்சி அலுவலகம் முன்பு கூடிய திமுக கவுன்சிலர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.