எங்களை ஏன் சந்திக்கவில்லை பிரியங்கா?-ராஜீவுடன் பலியானோர் குடும்பங்கள் கேள்வி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சோனியா காந்தியின் தலையீட்டால் அவருக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. அதேசமயம், அவருடைய கணவர் முருகனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கருணை மனு தாக்கல் செய்துள்ளதால் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது முதலே சோனியாவுடன் கடிததத் தொடர்பு வைத்துள்ளார் நளினி. இந்த நிலையில் சமீபத்தில் வேலூர் சிறைக்கு வந்து நளினியை பிரியங்கா சந்தித்தது ெபரும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
தற்போது ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது அவருடன் பலியானவர்களின் குடும்பத்தினரும், பிரியங்காவின் சந்திப்புக்கு எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.
செங்கை மேற்கு காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த முகம்மது இக்பால், ராஜீவ் காந்தியுடன் சேர்ந்து உயிரிழந்தவர். அவரது மனைவி நசீம் பானு மற்றும் மகன் ஜாவித் இக்பால் ஆகியோர் கூறுகையில், ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளிக்கக்கூடாது. குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்களை மன்னிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றனர்.
அதேபோல குண்டுவெடிப்பில் உயிரிழந்த லீக் முனுசாமி என்ற காங்கிரஸ் பிரமுகரின் மகன் லீக் மோகன், நளினிக்கு பெண் குழந்தை உள்ளது என்பதால் அவருக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்கமுடியாது. குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கும் குழந்தைகள் உள்ளனர்.
நளினிக்கு மன்னிப்பு அளிக்கவே கூடாது. இது தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு நான் கடிதம் எழுதினேன் என்று கூறியுள்ளார்.
வெடிகுண்டு சம்பவத்தில் படுகாயமடைந்து, இன்னும் உடலில் பாய்ந்த 70க்கும் மேற்பட்ட குண்டு துகள்களுடன் போராடிக் கொண்டிருக்கும் பார்த்தசாரதி, எனது மருத்துவ செலவை நானேதான் பார்த்துக் கொண்டேன். சொந்த செலவில் நீதிமன்றத்திற்கு சென்று சாட்சியமளித்தேன்.
ஆனால் காங்கிரஸ் கட்சியிலிருந்தோ, காந்தி குடும்பத்திலிருந்தோ எங்களுக்கு எந்த உதவியும் அளிக்கப்படவில்லை. யாரும் தங்களை வந்து பார்க்கக் கூட இல்லை என்கிறார்.