
அரசு நிலத்தை ஆக்கிரமித்து பிரித்துக் கொண்ட கிராம மக்கள்
காஞ்சிபுரம்: அரசு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கி பட்டா போட்டுத் தருமாறு கோரியதை அரசு கண்டுகொள்ளாததால், கிராம மக்கள் அந்த நிலத்தை ஆக்கிரமித்து தங்களுக்குள் பிரித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பஞ்சாயத்துக்குட்பட்ட காட்டு காலனி, கீழ்படப்பை, முருகாத்தம்மன்பேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட நிலமற்ற குடும்பங்கள், அதே பகுதியில் உள்ள பெரியார் நகரில் அரசுக்குச் சொந்தமான 10 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை தங்களுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என கோரி வந்தனர்.
இருப்பினும் இதுதொடர்பாக அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், பெரியார் நகர் நிலத்தை ஆக்கிரமித்து குடிசை போட்டார். பின்னர் பட்டாவும் வாங்கி விட்டார்.
இந்தத் தகவல் அறிந்ததும், நேற்று காட்டு காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பெரியார் நகருக்கு விரைந்தனர். ஆளுக்கு இரண்டு சென்ட் எனப் பிரித்து ஆக்கிரமித்தனர். மேலும் அங்குள்ள மரங்களையும் வெட்டத் தொடங்கினர்.
இதையடுத்து வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். கிராம மக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு கோரினர். ஆனால் தங்களுக்கு அரசே நிலத்தைப் பிரித்து பட்டா போட்டுக் கொடுக்கும் வரை இங்கிருந்து நகர மாட்டோம் என கிராமத்தினர் கூறி விட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.