சட்டசபையில் பாமக-காங். கடும் மோதல்- அதிமுக மகிழ்ச்சி ஆரவாராம்
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ்-பா.ம.க. எம்.எல்.ஏக்கள் இடையே சட்டசபையில் கடும் மோதல் நடந்தது. இரு தரப்பினரும் ஒருமையில் திட்டிக் கொண்டனர். இதை அதிமுக எம்எல்ஏக்கள் மகிழ்ச்சியோடு ரசித்ததோடு, மேஜைகளையும் தட்டி ஆரவாரம் செய்தனர்.
அவையில் நடந்த விவாதம்:
ஜி.கே.மணி ( பா.ம.க): இலங்கையில் மனித உரிமைகள் சீர்குலைந்து வருகிறது. உலக அளவில் இதற்கு எதிராக எச்சரிக்கைக் குரல் கொடுக்கப்படுகிறது. அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்புக்குள் அமைதி வழியில் பேச்சு நடத்தி அரசியல் தீர்வு காண வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இது பாராட்டுக்கு உரியது. போர் மூலம் எந்தத் தீர்வும் காண முடியாது. இந்தியாவும் இதை நம்பவில்லை. என்று பேசிய மணி திடீரென ஆவேசமாகி, ஆனால் இலங்கைக்கு இந்தியா... என்று ஆரம்பித்து ஒருமையில் தாக்கிப் பேசினார்.
மணி பேசிய அந்த வார்த்தைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சுதர்சனமும், பீட்டர் அல்போன்சும் தங்களை ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிப் பேச அனுமதிக்க வேண்டும் என்றனர்.
ஆனால், மணி பேசி முடித்த பின்னரே வாய்ப்பு தரப்படும் என்று சபாநாயகர் ஆவுடையப்பன் கூறினார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விடாப்பிடியாக நின்றபடி அனுமதி கேட்டனர்.
இதற்கு பா.ம.க எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிலர் ஒருவரை ஒருவர் ஒருமையில் திட்டிக் கொண்டனர்.
இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. ஒரே கூட்டணியை சேர்ந்த இரு கட்சியினர் மோதிக் கொள்வதை அதிமுக எம்எல்ஏக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு ரசித்தனர். இரு தரப்பும் வாக்குவாதம் செய்து கொண்டபோது அதிமுகவினர் மேஜைகளைத் தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இதையடுத்து சுதர்சனத்தை பேச அழைத்தார் சபாநாயகர். இதற்கு பா.ம.க எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர்.
சுதர்சனம்: இலங்கை ராணுவத்தையும் இந்திய அரசையும் தொடர்புபடுத்தி மணி கூறினார். மத்திய அமைச்சரவையில் பா.ம.கவும் பங்கேற்றுள்ளது. இந்தப் பிரச்சினையைப் பற்றி மத்தியில் கேபினட் மந்திரியாக இருக்கும் பா.ம.கவைச் சேர்ந்த அன்புமணி, அங்கு பேசி இருக்க வேண்டும். இங்கு வந்து இவர் பேசுவது முறையல்ல. இந்திய அரசு உதவி செய்வதாக தவறாகக் கூறுகிறார்கள். அவர் கூறிய தவறான வார்த்தைகளை நீக்க வேண்டும்.
ஜி.கே.மணி: சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற போது பிரதமர் மற்றும் சோனியாகாந்தி ஆகியோரை மருத்துவர் ஐயா ராமதாஸ் நேரில் சந்தித்து, இலங்கை பிரச்சினையில் சுமூக தீர்வு செய்யும்படி வற்புறுத்தியுள்ளார். தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வை மத்திய அரசுக்கு எடுத்துக் காட்ட வேண்டும் என்பதால்தான் இங்கே பிரச்சினையைக் கொண்டு வந்தோம். அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்புக்குள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் கூறியதைத்தான் நானும் வலியுறுத்திச் சொல்லுகிறேன். பிரதமர் கூறியதை முதல்வரும் வலியுறுத்துகிறார்.
முதல்வர் கருணாநிதி: பிரதமர் சொல்லியதில், ஒன்றுபட்ட இலங்கை என்று கூறியதை மணி ஏற்றுக் கொள்கிறாரா?
ஜி.கே.மணி: 1987ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டது. ராஜீவ்காந்தி மற்றும் ஜெயவர்த்தனே இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் அது. இப்போது அந்த ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு அங்கு 28ம் தேதி தேர்தல் நடத்த இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் ஒன்றுபட்ட இலங்கை என்பதற்கு காரணம், அங்கு ஒப்பந்தங்கள் மீறப்படக் கூடாது என்பது தான். இதை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
பிரதமர் கூறியபடி அமைதி வழியில் பேச்சு நடத்தி அரசியல் தீர்வு காண்பதற்காக இலங்கையில் போராடிக் கொண்டு இருக்கும் விடுதலைப் புலிகளும் ஒப்புக் கொள்ள வேண்டும். அங்கு நல்ல தீர்வு ஏற்பட இந்தியா எடுக்கும் முடிவுக்கு விடுதலைப் புலிகளும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
மு.கண்ணப்பன் (மதிமுக): ஆண்டாண்டுகளாக இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே போடப்பட்டு வந்த பல்வேறு ஒப்பந்தங்கள் கிடப்பில் போடப்பட்டு விட்டன. 1987ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தமும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இதை செயல்படுத்த இந்திய அரசை நாம் வலியுறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கையை நாம் பின்பற்றக் கூடாது.
சுதர்சனம்: ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்று கூறுகிறார்களே, அதை நடைமுறைப்படுத்த முடியாமல் போனதற்கு யார் காரணம்? 21.7.1987 அன்று ஒப்பந்தம் போடுவதற்காக ராஜீவ்காந்தி சென்றதும், அங்கே அவரை இலங்கை சிப்பாய் அடித்ததையும் நாடு மறக்கவில்லை. அந்த ஒப்பந்தத்தை கிடப்பில் போட மத்திய அரசு என்றுமே விரும்பியதில்லை.
இந்தப் பிரச்சினையில் இலங்கைக்கு தூதுவராக முதல்வர் கருணாநிதியை அனுப்ப விரும்பிய போது, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாஸ்போர்ட் இல்லாமல் கள்ளத் தோணியில் இலங்கைக்குச் சென்றார்.
(இதற்கு மதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர்).
அதனால் அதுவும் நடைபெறாமல் போய்விட்டது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நல்ல வாழ்வு அமைய வேண்டும் என்பதில் மத்திய அரசுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அப்பாவி தமிழர்கள் பெயரில் தமிழகத்தில் வன்முறை நடத்துவதை ஏற்க மாட்டோம்.
மு.கண்ணப்பன்: இலங்கைக்கு வைகோ கள்ளத் தோணியில் சென்றார் என்பதை நாங்கள் பெருமையோடு சொல்வோம். அங்குள்ள தமிழர்களின் நிலையை அறிந்து கொள்வதற்காகச் சென்றார் என்பதால் அது எங்களுக்கு பெருமையே தவிர சிறுமை அல்ல என்று கூறிய கண்ணப்பன், தொடர்ந்து பேசுகையி்ல் ஆனால் மத்திய அரசைப் போல் என்று ஆரம்பித்து அரசைத் தாக்கி சில கடுமையான வார்த்தைகள் பேசினார்.
இதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கடுமையான ஆட்சேபனை தெரிவித்ததால் அந்த வார்த்தைகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.