டி.ஆர். பாலு விவகாரம்-பிரதமர் அறிக்கை சமர்ப்பிக்க அத்வானி வலுயுறுத்தல்
திருவனந்தபுரம்: மகன்களின் நிறுவனத்துக்கு கேஸ் சப்ளை செய்த விவாகாரத்தில் டி.ஆர்.பாலுவுக்காக பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடித போக்குவரத்து நடந்துள்ளது. எனவே பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் பிரதமர் மன்மோகன் சிங் விளக்க அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அத்வானி கூறியுள்ளார் .
அத்வானியின், சுய சரிதை புத்தக வெளியீட்டு விழா திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அத்வானி அதை வெளியிட நடிகர் மம்முட்டி பெற்றுக் கொண்டார்.
பின்னர் நிருபர்களிடம் அத்வானி பேசுகையில்,
பொருளாதாரத்தை திறமையாக நிர்வகிப்பதில் காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும் தோல்வி அடைந்துவிட்டன. அதன் விளைவுதான் பணவீக்கம்.
அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இப்பிரச்சினையில் இடதுசாரி கட்சிகள் தங்கள் பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. தவறான பொருளாதார நிர்வாகம், பொருளாதாரம் உள்பட முக்கிய பிரச்னைகளில் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் இடையே காணப்படும் கருத்து வேறுபாடுகள்தான் இந்த விலை உயர்வுக்குக் காரணம்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்த 6 ஆண்டுகளில், பண வீக்கம் கட்டுப்பாட்டில் இருந்தது. பொருளாதாரத்தை திறமையான முறையில் கையாண்டதுதான் இதற்கு முக்கிய காரணம். இதை தவிர்த்து மத்திய, மாநில அரசுகள் இடையே சுமுக உறவை பராமரித்தோம். மேலும் எங்கள் கூட்டணிக் கட்சிகள் இடையே ஒற்றுமை காணப்பட்டது.
ஆனால் தற்போது விலைவாசி உயர்வுக்கு மாநிலங்களை மத்திய அரசு குறை கூறுகிறது. இதுபோல ஒருவர் மீது ஒருவர் பழி போடுவது பிரச்சினையை தீர்க்க உதவாது. விலைவாசி உயர்வு பிரச்சினையில் இடதுசாரி கட்சிகள் போராட்டம் நடத்துவது கண்துடைப்பு. அவர்கள் ஆதரவை வாபஸ் பெற்றால், மத்திய அரசு ஒரு நாள் கூட தாக்குப்பிடிக்க முடியாது.
தனது மகன்களுக்கு சொந்தமான நிறுவனத்துக்கு கியாஸ் சப்ளை செய்ய மத்திய பெட்ரோலிய அமைச்சக அலுவலகத்தை அணுகியதாக மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஒப்புக் கொண்டுள்ளார். இந்த விஷயத்தில் பாலுவுக்கு சாதகமாக நடந்து கொள்ளும்படி பெட்ரோலிய அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் 8 கடிதங்களை எழுதி உள்ளது.
பிரதமர் அலுவலகம் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டு இருப்பதால், பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஊழல் பிரச்னையில் அரசின் அதிகாரப்பூர்வ நிலையை அறிய விரும்புகிறோம். இதுகுறித்த பிரதமர் என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிய நாட்டு மக்களும் விரும்புகின்றனர் என்றார்.