கிராம சுகாதார செவிலியர்கள் தடுப்பூசி போட தடை

திருவள்ளூரில் சில நாட்களுக்கு முன்பு தட்டம்மை தடுப்பூசி போடப்பட்ட நான்கு பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் சில இடங்களிலும் இதுபோன்ற உயிர்ப் பலிகள் நடந்தன.
இதையடுத்து மாநிலம் முழுவதும் தட்டமை தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டன. தடுப்பூசி போடுவதும் நிறுத்தப்பட்டது. மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்ட குழந்தைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தடுப்பூசி தொடர்பாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
வரும் 30ம் தேதி முதல் மீண்டும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. ஒவ்வொரு வாரமும் இனி புதன்கிழமை தோறும் தடுப்பூசி போடப்படும்.
முகாம்கள் நடத்தும் போது உயிர் காக்கும் மருந்து வகைகள், போதுமான சுகாதார துறை ஊழியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகளை ஒவ்வொரு ஆரம்ப சுகாதார மையத்திலும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டு முடிந்ததும், குழந்தைகள் சுமார் 1 மணி நேரம் வரை சுகாதார மையங்களில் இருந்து விட்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும், தடுப்பூசி போட எப்போது குழந்தைகள் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு அழைத்து வரப்பட வேண்டும் என்று தனி பட்டியல் தயாரித்து பணியாற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடும் முகாம்கள் நடத்தப்படும் நாட்களில் கண்டிப்பாக ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடப்படும் குழந்தைகளுக்கு இனி எந்த வித பிரச்சினையும் ஏற்பட கூடாது என்பதற்காக கிராம சுகாதார செவிலியர்கள் தடுப்பூசி போட தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதில் டாக்டர்களே குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.
எனவே இனி கிராம செவிலியர்கள் வீடு, வீடாக வந்து தடுப்பூசி போட மாட்டார்கள். அதற்கு பதில் தாலுகாக்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவனைகளுக்கு குழந்தைகளை அழைத்து சென்று போட்டுக் கொள்ள வேண்டும்.
தமிழகம் முழுவதும் 1400 ஆரம்ப சுகாதார மையங்கள், 270 அரசு ஆஸ்பத்திரிகள் 163 ஊரக மருத்துவ மையங்கள், மற்றும் 8721 துணை சுகாதார மருத்துவ மையங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப் படுகின்றன. ஒவ்வொரு மாதமும் சுமார் 1 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை, மஞ்சள் காமாலை, டிப்திரியா, காசநோய் தடுப்பு போன்ற தடுப்பூசிகள் போடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.