ஓமனில் இறந்த கணவரின் உடலை கொண்டு வர மனைவி கோரிக்கை
மேல்புறம் (கன்னியாகுமரி): ஓமன் நாட்டில் பலியான கன்னியாகுமரி தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அவரது மனைவி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சுவாமியார்மடம் அருகே உள்ள பிலாவிளையைச் சேர்ந்தவர் பால்மணி (52). இவருடைய மனைவி சாந்தா. இவர்களுக்கு வினு, விஜில் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். பால்மணி கடந்த 10 மாதங்களுக்கு முன் ஓமன் நாட்டுக்கு கட்டிட வேலைக்காகச் சென்றார்.
இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக கடந்த 28ம் ஓமன் நாட்டில் இருந்து மற்ற தொழிலாளர்கள் போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதைகேட்ட அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழந்தனர். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவும்படி அவரது மனைவி சாந்தா அரசிடம் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அரசுக்கு அவர் அனுப்பிய மனுவில், எனது கணவர் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். அவரது மரணம் எனக்கும் எனது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் இறந்ததற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.