மதுரை சிப்காட் பூங்காவுக்கான நில ஆர்ஜிதம் கைவிடப்பட்டது
மதுரை: மதுரை வளையங்குளம் பகுதியில் சிப்காட் தொழிற் பூங்கா அமைப்பதற்கான நில ஆர்ஜிதம் கைவிடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மதுரை மாவட்டம், தெற்கு வட்டம் வளையங்குளம், எலியார்பத்தி, சோளங்குருணி ஆகிய கிராமங்களில் 894.16 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா ஏற்படுத்த 2.7.2007ல் அரசு நிர்வாக அனுமதியை அளித்தது.
இத்திட்டத்திற்கான நில எடுப்புப் பணிகளும் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் நில உரிமைதாரர்கள் இந்த நில எடுப்பை கைவிடக் கோரி ஆட்சித் தலைவருக்கும், அரசுக்கும் கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து வரப் பெற்ற அறிக்கையில், நில ஆர்ஜிதம் செய்ய உத்தேசிக்கப்பட்ட நிலங்களில் தற்போது பரவலாக மல்லிகை, வாழை, நெல்லி, தென்னை, பருப்பு வகைகள், தானிய வகைகள், காய்கறிகள், பூக்கள், தேக்கு, மா போன்ற பயிர்கள் பயிரடப்பட்டுள்ளன.
நிலம் ஆர்ஜிதம் செய்ய உத்தேசிக்கும் நிலங்களில் சுமார் 90 பாசனக் கிணறுகள் இருப்பதாகவும் இந்நில உரிமையாளர்கள் பெரும்பாலும் ஏழைகள் என்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட வகுப்பினைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் என்றும், இந்த நிலங்களில் இருந்து கிடைக்கும் குறைந்த வருமானத்தைக் கொண்டுதான் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் ெதரிவித்துள்ளார்.
விவசாயிகள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட இந்த அரசு, தொழில் வளர்ச்சிக்காக இருப்பினும், சிறிதளவும் பாதிக்கப்படாமல் நில ஆர்ஜிதம் செய்யப்பட வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டுள்ளதால், இத்திட்டத்தினை மறு ஆய்வு செய்து நில உரிமையாளர்களின் ஒட்டுமொத்த உணர்வுக்கு மதிப்பளித்து இந்த நில ஆர்ஜிதப் பணியை கைவிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.