For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமதாஸை புள்ளி விவரங்களால் 'காய்ச்சிய' முதல்வர்!

By Staff
Google Oneindia Tamil News

முதல் பக்கம்முதல் பக்கம்

கேள்வி: சென்னை அருகே எண்ணூரில் கப்பல் கட்டும் தளமும், துறைமுகமும் அமைப்பதற்கு எல் அண்ட் டி நிறுவனத்திற்கு இசைவு வழங்கப்பட்டு பெருமளவிலான நிலமும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதை நான் எதிர்க்கவில்லை என்று டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே?

பதில்: அது தான் விந்தையாக உள்ளது. இதுவும் தமிழ்நாட்டிலே பிறந்தவர் தொடங்கும் தொழிற்சாலை அல்ல. இதற்கும் நிலம் எடுக்கப்படத்தான் உள்ளது. ஆனால் இதுபோன்ற ஒருசிலவற்றை மட்டும் ஆதரிக்கும் டாக்டர் வேறு சிலர் ஆரம்பிக்கின்ற தொழிற்சாலைகளை மட்டும் எதிர்க்கிறார். ஆனால் தமிழக அரசைப் பொறுத்தவரையில் எந்த விதமான பாகுபாடும் இல்லாமல்,

தமிழகத்திலே தொழிற் சாலைகளைத் தொடங்கி, தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தொழில் தொடங்க அனுமதி வழங்கி வருகிறது. டாட்டாவையும் வேண்டாமென்று சொல்ல வில்லை. எல் அண்ட் டி தொழிற்சாலையையும் வேண்டாமென்று சொல்லவில்லை. தொழிற்சாலையைத் தொடங்குவது யார் என்று பார்க்காமல், என்ன தொழிற்சாலை, எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தான் பார்க்கிறோம்.

கேள்வி: தொழில் வளர்ச்சி என்ற பெயரால் மனை வணிகத்திற்கு ஊக்கமளிக்கும் திட்டங்கள் கூடாது என்கிறாரே டாக்டர்?

பதில்: திமுக அரசு மனை வணிகத்திற்கு ஊக்கமளிக்கும் எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது? ஒரு பெரிய தொழிற்சாலை வந்தால், அங்கே பணியாற்றுபவர்களுக்கான வசதிகள், குடியிருப்புகள் அந்தப் பகுதியிலே வரத்தானே செய்யும். 24 மணி நேரமும் தொழிற்சாலைகளிலேயே இருந்து கொண்டு வேலை பார்க்க இயலாதல்லவா? டாக்டர் கூற்றுக்கு ஆதாரமாக பத்திரிகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, 'சென்னை பரங்கிமலை அருகே, மணப்பாக்கத்தில் டி.எல்.எப். நிறுவனம் உருவாக்கிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவின் வெளிப்புறத் தோற்றம். ஐ.பி.எம். உள்ளிட்ட பல நிறுவனங்களுக்குக் கட்டடங்களை ஏற்கனவே வாடகைக்கு விட்டிருக்கிறது இந்த நிறுவனம்' என்று அடிக்குறிப்பு எழுதப்பட்டுள்ளது.

இந்த அடிக்குறிப்பிலேயே நான் கூறுவதற்கும் விடை உள்ளது. அதாவது 'ஐ.பி.எம். உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு' என்பதிலிருந்தே- இது போன்ற பல தொழில் நிறுவனங்களுக்கு அடிப்படை வசதிகளோடு டி.எல்.எப். நிறுவனம் இடங்களைக் கட்டிக் கொடுக்கிறது.

மிகப்பெரிய நிறுவனங்கள் தொழில் தொடங்குவதென்றால் தாங்களாகவே கட்டிக் கொள்ளலாம். நடுத்தரமான தொழிற்சாலைகள் தொடங்கும் போது, அவர்களே திட்டமிட்டு கட்டிடங்களைக் கட்டுவதற்கு தாமதமாகலாம் அல்லது தயாராக இல்லாமல் இருக்கலாம். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் டி.எல்.எப். நிறுவனம் அனைத்து வசதிகளையும் கொண்ட கட்டிடங்களைக் கட்டித் தருகிறது. இதிலே என்ன தவறு?. அதுபோலவே இத்தகைய பல்வேறு நிறுவனங்களிலே பணியாற்றுபவர்கள் வசிப்பதற்கான வீடுகளையும் அந்தத் தொழிற்சாலைகளுக்கு அருகிலேயே அமைத்துக் கொடுக்கும் பணியிலும் அந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

கேள்வி: தொழில் கொள்கையில் அறிவித்ததை நிறைவேற்றுங்கள் என்று தான் சொல்கிறோம் என்று செய்தியாளர்களிடம் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறாரே?

பதில்: தொழில் கொள்கை தி.மு.க அரசு கொண்டு வந்தது தானே. அப்படியிருக்க அதை நிறைவேற்ற மாட்டோம் என்றா சொல்வோம். தொழிற் கொள்கையில் சொல்லியவற்றைத் தான் செய்து கொண்டிருக்கிறோம். தி.மு.கவைப் பொறுத்தவரை செய்வதைத் தான் சொல்வோம், சொன்னதைத் தான் செய்வோம்.

கேள்வி: அரசு நிலங்களைக் கொடுக்கும்போது, அமைச்சரவை மட்டும் கூடி முடிவெடுக்கக் கூடாது என்றும், சட்டமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டுமென்றும் பா.ம.க. தலைவர் சொல்லியிருப்பதைப் பற்றி?

பதில்: நல்ல யோசனை, 2011ம் ஆண்டு தமிழகத்திலே பா.ம.க. ஆட்சியில் இது நிறைவேற்றப்பட்டு, இந்தப் பெருமை டாக்டர் அவர்களுக்கே சேரட்டும். அரசு நிலங்களைத் தான் பட்டாக்கள் என்ற பெயரால் ஏழையெளிய விவசாயிகளுக்கும், நில மற்றவர்களுக்கும் கூட வழங்குகிறோம். அப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான பட்டாக்களைப் பற்றியும், அதைப் பெறுகின்ற ஒவ்வொரு ஏழைகளைப் பற்றியும் சட்டமன்றத்தில் விவாதித்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

கேள்வி: தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் எத்தனை பேருக்கு என்னென்ன வேலை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து நடப்பு சட்டமன்றத்திலேயே வெள்ளை அறிக்கை ஒன்றை அரசு வெளியிட வேண்டுமென்று டாக்டர் ராமதாஸ் கட்டளையிட்டிருக்கிறாரே?

பதில்: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களே தொடங்கப்படவில்லை என்றும் அதிலே யாருக்கும் வேலை வாய்ப்பு வழங் கப்படவில்லை என்றும் அவர் நினைக்கிறாரா என்ன? சென்னை மாநகரில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சார்பில் பேருந்துகள், தங்கள் பணியாளர்களை ஏற்றிக் கொண்டு காலையிலும் மாலையிலும் சாலைகளில் செல்வதைப் பார்த்தாலே, வேலை வாய்ப்பு கிடைத்ததா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாமே?

ஒவ்வொரு தொழிற்சாலைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும்போதும், அவர்கள் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பார்கள், அப்படி பணிக்கு எடுக்கப்படுகிறவர்கள் தொழிற்சாலைக்கு அருகிலே வாழுகின்ற தமிழர்களாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனை விதித்து தான் அளிக்கப்படுகின்றன. அந்தத் தொழிற்சாலைகள் கூறுகின்ற எண்ணிக்கையில் 100 பேர் குறைவாக இருக்கலாம், அல்லது 100 பேர் அதிகமாக இருக்கலாம். தொழிற்சாலை வளர வளர அந்த எண்ணிக்கை கூடலாம். அதற்கெல்லாம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்றால் என்ன செய்வது. நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்க்கையை நடத்த வேண்டுமே தவிர, எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்த்தால் எதுவும் நடக்காமல் போய் விடும்.

இது மாத்திரமல்ல, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் எல்லாம் இந்த இரண்டாண்டு காலத்தில் தான் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டு, கட்டிடங்கள் கட்டும் பணியிலும், இயந்திரங்களை நிறுவும் பணியிலும் ஈடுபட்டு தொழில் நிறுவனங்களைத் தொடங்கும் நிலையிலே உள்ளார்கள். முழு அளவில் நிறுவனங்களைத் தொடங்க இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகும்.

இதுவரை 13 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அவற்றில் 6 நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கிவிட்டன. 6 நிறுவனங்களுக்கான கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

மோட்டரோலோ நிறுவனத்தில் நேரடியாக 600 பேருக்கும் மறைமுகமாக 1,000 பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்குமென்று ஒப்பந்த நேரத்தில் தெரிவித்தார்கள். இதன்படி தற்போது நேரடியாக 600 பேரும், மறைமுகமாக 1000 பேரும் பணி வாய்ப்பு பெற்று பணியாற்றுகிறார்கள்.

டெல் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் நேரடியாக 200பேருக்கும், மறைமுகமாக 600 பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்குமென்று கூறப் பட்டது. தற்போது நேரடியாக 200 பேரும் மறைமுகமாக 600 பேரும் பணி வாய்ப்பு பெற்று விட்டார்கள்.

சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தத்தின் போது தெரிவித்தவாறு நேரடியாக 300 பேரும், மறைமுகமாக 150 பேரும் பணி வாய்ப்பு பெற்றுவிட்டனர்.

கேபாரோ வாகன உற்பத்தி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நேரடியாக 350 பேரும், மறைமுகமாக 350 பேரும் ஒப்பந்ததில் தெரிவித்தவாறு வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்கள்.

சான்மினா- எஸ்.சி.ஐ. கார்பரேஷன் ஆப் யு.எஸ்.ஏ. நிறுவனத்தில் நேரடியாக 475 பேரும், மறைமுகமாக 150 பேரும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளார்கள்.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தில் இரண்டு கட்டங்களிலும் சேர்த்து நேரடியாக 11,324 பேரும், மறைமுகமாக 22,000 பேரும் ஒப்பந்தத்தில் தெரிவித்தவாறே வேலை வாய்ப்பு பெற்று பணியாற்றி வருகிறார்கள்.

தொழில்துறையைப் பொறுத்து மாத்திரம் நேரடியாகவும், மறைமுக மாகவும் 37,499 பேர் வேலை வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்.

தகவல் தொழில் நுட்பத்துறையைப் பொறுத்தவரை தி.மு.கழக ஆட்சி மலர்ந்த பிறகு மாத்திரம் வேலை வாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 610 பேர்.

ஒரு உதாரணம் கூற விரும்புகிறேன். நோக்கியா நிறுவனத்தின் சார்பில் தனது பணியாளர்களை அழைத்து வர மட்டும் 80 பேருந்துகள் இயங்குகின்றன என்பதிலிருந்தே வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு ராமதாஸை புள்ளி விவரங்களால் 'காய்ச்சி எடுத்துள்ளார்' முதல்வர் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X