
பிரியங்கா: வேலூர் சிறைக் கண்காணிப்பாளரைத் தண்டிக்க கோரிக்கை

மாநில தகவல் அறியும் ஆணையத்தில், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வேலூர் சிறைக்கு பிரியங்கா வந்து நளினியை சந்தித்தாரா என்று மாணவர் ராஜ்குமார் ஏப்ரல் 11ம் தேதி மனு செய்து விளக்கம் கோரியிருந்தார்.
அதற்கு வேலூர் மகளிர் சிறைக் கண்காணிப்பாளர் ராஜசௌந்தரி அனுப்பிய பதிலில், மார்ச் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை பிரியங்கா என்ற பெயரில் யாரும் நளினியை சந்திக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இதுகுறித்து விளக்கம் கேட்டு மாநில உள்துறை செயலாளருக்கு மனு செய்தார் ராஜ்குமார்.
பிரியங்கா - நளினி சந்திப்பு குறித்த செய்தி ஏப்ரல் 15ம் தேதி பத்திரிக்கைகளில் வெளியானது. மேலும், தான் நளினியை சந்தித்தது உண்மைதான் என்று அன்றைய தினமே பிரியங்காவும் பகிரங்கமாக ஒத்துக் கொண்டார்.
இந்த சந்திப்பை முதல்வர் கருணாநிதி சட்டசபையில், ஏப்ரல் 23ம் தேதி உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில், தற்போது தவறான தகவலைத் தெரிவித்த ராஜசௌந்தரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில தகவல் ஆணையத்திடம் அப்பீல் செய்துள்ளார் ராஜ்குமார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள மனுவில், தவறான தகவலைக் கொடுத்த வேலூர் மகளிர் சிறை கண்காணிப்பாளர் ராஜசௌந்தரி மீது தகவல் அறியும் சட்டத்தின் 18(2) பிரிவின் கீழ் நடவடிக்ைக எடுத்துத் தண்டிக்க வேண்டும்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பிரியங்கா - நளினி சந்திப்பு குறித்த செய்திகள் ஏப்ரல் 15ம் தேதி பத்திரிகைகளில் வெளியானது. இதையடுத்து இந்த சந்திப்பு உண்மைதான் என்று பிரியங்காவும் அன்றைய தினமே ஒத்துக் கொண்டார்.
மேலும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையிலும், பிரியங்கா, நளினியை சந்தித்தது உண்மைதான். இது முற்றிலும் தனிப்பட்ட முறையிலான சந்திப்பு. சட்டப்பூர்வமாகவே இந்த சந்திப்பு நடந்ததாக தெரிவித்துள்ளார்.
மாநில அரசும் பிரியங்கா - நளினி சந்திப்பை மறுக்கவில்லை. சட்டசபையில் இதுகுறித்து முதல்வர் கருணாநிதியும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக ஏப்ரல் 11ம் தேதி உள்துறைச் செயலாளருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினேன். அந்தக் கடிதம் வேலூர் சிறைக் கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைத்தார். அதன் நகல் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பிரியங்கா - நளினி சந்திப்பு அனைத்து வகையிலும் உண்மையானதே என்று உறுதியாகியுள்ள நிலையில், சந்திப்பு நடைபெறவே இல்லை என்று பொய்யானத் தகவலைக் கொடுத்த சிறைக் கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராஜ்குமார்.
ராஜ்குமாரின் இந்தப் புதிய மனுவால் வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் ராஜசௌந்தரிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.