சென்னை பெண் கன்னியாகுமரியில் மர்ம சாவு
குளச்சல்: சென்னையைச் சேர்ந்த பெண் கணவர் வீட்டாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம், ஸ்ரீகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஜெபமணி. இவரது மகன் டார்சன். இவர் சென்னை அயனாவரத்தில் வல்கனைசிங் கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது டார்சனுக்கும் அயனாவரத்தை சேர்ந்த முனுசாமி மகள் விஜயா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொண்டு கடந்த 6 மாதத்திற்கு முன்னர் ஸ்ரீகிருஷ்ணாபுரம் வந்தனர்.
ஸ்ரீகிருஷ்ணாபுரத்தில் உள்ள வீட்டில் இருவரும் வசித்து வந்தனர். டார்சனின் தந்தை ஜெபமணி ஏற்கனவே இறந்துவிட்டதால் அந்த வீட்டில் அவரது தாயார் செல்லதங்கம் மட்டும் வசித்து வருகிறார்.
இந்நிலையில் டார்சன் காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். விஜயாவும், செல்லத்தங்கமும் மதியம் உணவு சாப்பிட்டுள்ளனர். பின்னர் செல்லத்தங்கம் தனது அறைக்கு தூங்க சென்று விட்டார். மாலை 4 மணிக்கு எழுந்து வந்து பார்த்தபோது விஜயா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் தனது மகனுக்கு தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த டார்சன் தூக்கில் தொங்கிய மனைவியை இறக்கி கயிற்றை அப்புறப்படுத்தினார்.
பின்னர் அந்த பகுதியை சேர்ந்த சில வாலிபர்களை அழைத்த டார்சன் வீடு அருகே உரம் வெட்டுவதற்கு ஒரு குழி தோண்ட வேண்டும் என்று கூறி குழி தோண்டியுள்ளார். அப்போது சந்தேகம் அடைந்த வாலிபர்கள் வீட்டுக்குள் பார்த்தபோது அங்கு விஜயா பிணமாக கிடப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அங்கிருந்த சென்ற வாலிபர்கள் கிராம மக்களிடம் தெரிவித்தனர். அந்த பகுதி மக்கள் ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை புதைப்பதை தடுத்தனர்.
இதனையடுத்து உடலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆர்.டி.ஓ விசாரணைக்கு பின்னர் விஜயாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர். விஜயா அடித்துக் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.