மகள் விவாகரத்தால் விரக்தி: விவசாயி வெட்டி கொலை
தூத்துக்குடி: மகள் திருமணம் விவாகரத்து ஆனதால் விரக்தி அடைந்த தந்தை மாஜி சம்பந்தியை தனது மகனுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை அடுத்துள்ள செம்பூரை சேர்ந்தவர் பிச்சைகுட்டி. விவசாயி. இவரது மகன் ராமசந்திரன். இதே ஊரை சேர்ந்தவர் சந்திர பாண்டியன். இவரது மகள் லெட்சுமி.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ராமசந்திரனுக்கும் லெட்சுமிக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஸ்ரீகுமார் என்ற மகன் உள்ளார். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 7 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில் தனது மகன் ராமசந்திரனுக்கு விவாகரத்து கேட்டு பிச்சைகுட்டி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் ராமசந்திரனுக்கு சாதகமாக தீர்ப்பு கூறப்பட்டது. இதையடுத்து மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைப்பதற்காக பிச்சைகுட்டி பெண் பார்த்து வந்தார்.
இதைக் கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த சந்திரபாண்டியன் தனது மகள் வாழ்க்கையை வீணாக்கிய பிச்சைகுட்டியை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.
இந்நிலையில் பிச்சைகுட்டி இன்று தனது வயலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற சந்திரபாண்டியன், அவரது மகன் ராஜேஸ் ஆகியோர் பிச்சைகுட்டியை வழிமறித்து தகராறு செய்தனர். இதில் ஏற்பட்ட தகராறில் பிச்சைக்குட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டார்.
இதில் பிச்சைகுட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.