ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு: பெண் தீவிரவாதி்க்கு வலை

Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பெண் ஒருவர் ஈடுபட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராஜஸ்தான் தலைநகரான ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் ஒரு பெண் தீவிரவாதிக்கு தொடர்பிருப்பதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக மும்பையை சேர்ந்த விஜய் என்ற ரிக்ஷாகாரர் உள்பட 8 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்பில் ரிக்ஷாகாரர் விஜய்க்கு முழங்காலில் வெடிகுண்டு சிதறல்கள் பாய்ந்ததால் பலத்த காயமடைந்துள்ளார். சந்தேகத்தின் பேரில் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையின்போது, வெடிகுண்டு தாக்குதலை நடத்துவதற்கு உதவினால் ரூ. ரூ.1 லட்சம் தருவதாக மீனா என்ற பெண் ஆசைகாட்டியதாக விஜய் தெரிவித்துள்ளார்.
குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த ஒரு இடத்தில்தான் அந்த பெண் குடியிருப்பதாகவும், இதுதவிர வேறு எந்த தகவல்களும் அந்தப் பெண்ணைப் பற்றி தெரியாது என்றும் விஜய் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த பெண்ணின் அடையாளங்களை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் ஜெய்ப்பூர் தாக்குதலில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, ஜெய்ப்பூரில் நேற்று இரவு 7.15 மணிக்கு தொடங்கி 10 நிமிட இடைவெளியில் 8 இடங்களில் தொடர்ந்து குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. மக்கள் நடமாட்டம் மிகுந்த மார்க்கெட் பகுதிகளில் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடல்கள் சிதறியதால் பலரை அடையாளம் தெரியவில்லை. இதனால் மருத்துவமனையில் உடல்களை வாங்குதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சாந்த்போல், சங்கனேர் கேட், திரிபோலியா பஜார், ஜோகரி பஜார், மனாஸ் சவுக், பதி சவுபால், சோட்டி சவுபால், ஹனுமன் மந்திர் ஆகிய இடங்களில் குண்டு வெடித்து. ஜோகரி பஜாரில் மட்டும் 3 குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளன.

பணி நேரம் முடிந்து மக்கள் வீடு திரும்பும் நேரம் என்பதால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமானது. குண்டு வெடித்த பகுதி போர்க்களம் போல ரத்த சகதியாய் இருந்தது. எங்கு பார்த்தாலும் மரண ஓலங்களாக இருந்தது. பதற்றமும் பீதியும் அடைந்த மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர்.

பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதி தாக்குதல் மாநிலம் முழுவதும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் அதிக பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அண்டை மாநிலங்கள் உஷார் படுத்தப்பட்டு எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன என்று டிஜிபி ஏ.எஸ்.கில் தெரிவித்தார்.

4 பேர் கைது:

குண்டு வெடிப்பு தொடர்பான முதல்கட்ட ஆய்வில் தாக்குதலுக்கு ஆர்டிஎக்ஸ் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிய சைக்கிளில் சக்தி வாய்ந்த ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. வெடிமருந்துடன் பால் பேரிங் அடைத்து வெடி குண்டாக பயன்படுத்தியிருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

மேலும் இந்த தாக்குதலில் வங்கதேச தீவிரவாத அமைப்பான ஹர்கத் உல்-ஜெஹாதி இஸ்லாமியா தொடர்பு இருக்கிறது என்றும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நிவாரணம்:

இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அவசர ஆலோசனை:

குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் உயர்மட்டக் குழுவின் அவசர கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

ஜெய்ப்பூர் தொடர் குண்டு தாக்குதலை அடுத்து நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஊரடங்கு:

மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ஜெய்ப்பூரில் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சோனியா ஆறுதல்:

பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் நாளை ஜெய்ப்பூர் செல்கின்றனர்.

அமெரிக்கா இரங்கல்:

ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அமெரிக்க ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் மல்போர்டு, இந்திய வெளியுறவு செயலர் சிவ்சங்கர் மேனனை இன்று சந்தித்து பேசினார். இருவரும் 30 நிமிடங்கள் பேசினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டேவிட் மல்போர்டு கூறியதாவது: ஜெய்ப்பூரில் நடந்த தாக்குதலுக்கு அமெரிக்கா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அப்பாவி மக்களின் மீதான இந்த தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது தீவிரவாதிகளின் வஞ்சக செயல்.

இந்த சதிச்செயலை செய்தவர்களை கண்டுபிடிக்க தேவையான உதவிகளை இந்தியாவுக்கு செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது. சம்பவத்தின் விளைவுகளை அமெரிக்கா தொடர்ந்து கண்காணிக்கும். ஜெய்ப்பூர், ஆக்ரா மீது அமெரிக்க மக்களுக்கு ஈடுபாடு அதிகம் என்றார்.

சிவ்சங்கர் மேனன் கூறுகையில், தேவைப்பட்டால் உதவிகளை பெற்றுக் கொள்ள நாடுவதாக டேவிட் மல்போர்டிடம் தெரிவித்ததாக கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற