இலங்கையில் தமிழர் கட்சி பெண் தலைவர் சுட்டுக்கொலை

இலங்கை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த பெண் தலைவர் மகேஸ்வரி வேலாயுதன் (53). யாழ்ப்பாணம் காங்கேசன்துறை அருகே கரவெட்டி என்ற இடத்தில் அவரது தாயின் வீடு உள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயை பார்க்க மகேஸ்வரி நேற்று சென்றார்.
இந்நிலையில் இரவு 8 மணிக்கு ராணுவ உடையில் துப்பாக்கியுடன் வந்த 3 பேர் அவரது வீட்டுக்குள் நுழைந்தனர். அடையாள அட்டை காட்டும்படி கேட்டனர். அவர்களை பார்த்து சந்தேகமடைந்த மகேஸ்வரி, அவர்கள் ராணுவ வீரர்களாக இருக்க முடியாது என்று நினைத்து சுதாரிப்பதற்குள் அந்த கும்பல் மகேஸ்வரியை சரமாரியாக சுட்டது. ரத்த வெள்ளத்தில் மகேஸ்வரி சரிந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.
பலத்த காயமடைந்த மகேஸ்வரியை யாழ்ப்பாண மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் வழியிலேயே மகேஸ்வரி இறந்தார்.
அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. ஆனால் தாயை பார்ப்பதற்காக அவர் சென்றபோது சுட்டு கொலை செய்யப்பட்டார்.
அவரது உடல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். மகேஸ்வரியை கொலை செய்தது விடுதலை புலிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.