4 தொகுதியில் போட்டி-ஜெ. மீதான வழக்கு ஒத்திவைப்பு
புதுக்கோட்டை: நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தது தொடர்பாக புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் ஜெயலலிதா மீதான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
திமுக எம்.பி. குப்புசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2002ம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது, கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளி்ல் போட்டியிட ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஒருவர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போடியிடக் கூடாது என்பது தேர்தல் விதி. 4 தொகுதிகளில் மனு தாக்கல் செய்துவிட்டு இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட மனு தாக்கல் செய்யவில்லை என்று ஜெயலலிதா பொய்யான தகவல் கூறியுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா மீது ஆறு வாரங்களுக்குள் வழக்கு தொடரலாம் என்று தேர்தல் கமிஷனுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி புதுக்கோட்டை தேர்தல் அதிகாரியும், ஆர்டிஒவுமான மோகன், புதுக்கோட்டை ஜூடிசியல் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மாஜிஸ்திரேட் பத்மநாபன் வழக்கு விசாரணையை வரும் ஜூலை மாதம் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.