ஓய்வு பெறுவதற்குள் ஈரானை புஷ் தாக்குவார்: செய்தி

ஆர்மி ரேடியோ எனப்படும் அந்த வானொலி வெளியிட்டுள்ள செய்தியில், ஈரான் மீது தாக்குதல் நடத்த ஜார்ஜ் புஷ் மும்முரமாக உள்ளார். ஆனால் அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸும், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கான்டலீசா ரைஸும் அறிவுரை கூறி வருவதால் தனது நடவடிக்கையை தாமதப்படுத்துகிறார் புஷ்.
இருப்பினும் ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டியது அவசியம் என்ற முடிவில் அதிபர் புஷ்ஷும், துணை அதிபர் டிக் செனியும் உள்ளனர்.
ஈரானின் உதவியுடன் லெபனானில் தனது நிலையை ஸ்திரப்படுத்தி வருகிறது ஹிஸ்புல்லா. எனவே இப்போதைய நிலைப்படி, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.
ஈரான் அதிபர் முகம்மது அகமதியேஜத்தின் வளரும் செல்வாக்கை உறுதிப்படுத்துவதாக ஹிஸ்புல்லாவின் ஸ்திரத்தன்மை இருப்பதாக புஷ் கருதுகிறார்.
நோய்க்குத்தான் சிகிச்சை அளிக்க வேண்டுமே தவிர அதன் அறிகுறிக்கு சிகிச்சை தருவதில் பலன் இல்லை என்ற கருத்தில் உறுதியாக உள்ளார் புஷ்.
ஈரான் தொடர்ந்து தீவிரவாதத்திற்கு ஆதரவு தருகிறது. இதன் மூலம் எதிர்கால சந்ததியினரின் பிரகாசமான வாழ்க்கைக்கு அது முடிவு கட்டிக் கொண்டிருக்கிறது. அதை அனுமதிக்க முடியாது.
உலகம் அமைதியாக வாழ வேண்டுமானால் ஈரான் போன்ற நாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்ற கருத்தையும் புஷ் உறுதியாக கொண்டுள்ளார். எனவே தனது பதவிக்காலம் முடிவதற்குள் ஈரான் மீது தாக்குதல் நடத்த புஷ் உத்தரவிடக் கூடும் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.