பள்ளிக்கு வந்தால் ரூ. 1 பரிசு - அரசுப் பள்ளியின் நூதனத் திட்டம்
தேனி: தேனி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில், பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு தினசரி 1 ரூபாய் பரிசு அளிக்கும் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பிள்ளைகள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நூதனத் திட்டத்தை பள்ளி நிர்வாகம் அமல்படுத்தியுள்ளதாம்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நாளுகக்கு நாள் குறைந்து வருகிறது. பல அரசுப் பள்ளிகளில் நல்ல தரமான கல்வி வழங்கப்பட்டபோதிலும் கூட, பணத்தை சுரண்டும் தனியார் பள்ளிகள் மீதுதான் பெற்றோர்களுக்கு மோகம் அதிகமாக உள்ளது. எவ்வளவு கேட்டாலும் கண்ணை மூடிக் கொண்டு கொட்டிக் கொடுக்கவே பெற்றோர்கள் விரும்புகின்றனர்.
தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைகள் படித்தால்தான் அது கெளரவம் என்ற தேவையில்லாத ஒரு கருத்தும் பெற்றோர்களிடம் உள்ளது.
இந்த நிலையில் தேனி அருகே உள்ள போடி பிச்சாண்டிபட்டி அரசு நடுநிலைப் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு ரூபாய் வழங்க கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் .
இந்த திட்டம் இந்த ஆண்டு முதலே அமுலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ரூபாய் திட்டத்தின் பின்னணி குறித்து கல்வி அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, குழந்தைகள் கல்வி கற்காமல், இளம் வயதில் வேலைக்கு செல்கின்றனர். அதை தடுக்கவே அரசு, குழந்தைகளுக்கு இலவச சீருடை, புத்தகம், மதிய உணவு,போன்றவைகளை வழங்கி வருகின்றன.
இருப்பினும் பல ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
அந்த நிலையை மாற்றத்தான் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு தினம் ஒரு ரூபாய் வழங்கும் திட்டம் அறிவித்துள்ளோம்.
சிலேட்-பை-சோப் இலவசம்:
மேலும், முதலில் பள்ளியில் சேரும் 50 மாணவர்களுக்கு இலவச சிலேட், பை, குளியல் சோப் வழங்க உள்ளோம்.
அது மட்டும் அல்ல, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தேர்வு கட்டணம் இலவசமாக வழங்க உள்ளோம் என்றார்.
மேற்கண்ட தகவலை பள்ளி தலைமை ஆசிரியர் செயகுமார் உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த பலே திட்டத்தை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தலாமே?