போலீஸ் போடும் 'ஜால்ரா'-விஜய்காந்த் தாக்கு
ஈரோடு: தேர்தல் காலத்தில் ஆளுங்கட்சியினர் உங்களை வெற்றிலை, பாக்கு தட்டுடன் பணம் கொடுத்து சத்தியம் பெற்று ஓட்டு போட சொல்வார்கள். அவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு எனக்கு ஓட்டு போடுங்கள் என தேமுக தலைவர் விஜய்காந்த் கூறினார்.
ஈரோட்டில் தனது கட்சியின் பிரமுகரின் திருமணத்தை நடத்தி வைத்து அவர் பேசுகையில்,
நான் நடித்து சம்பாதித்த பணத்தில் வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்கலாம். ஆனால், என் மக்கள் ஏழைகளாக உள்ளனர். இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன்.
நான் அரசியலில் சினிமா வசனம் பேசுவதாக கூறுகின்றனர். மற்றவர்கள் தேன் ஒழுகப் பேசி மக்களை ஏமாற்றுகின்றனர்.
விவசாயத்தை காப்பாற்ற நிதியமைச்சர் சிதம்பரமும், முதல்வர் கருணாநிதியும் தவறி விட்டனர். நகரத்தில் உள்ள குழந்தைகள் மட்டும் நன்கு ஆங்கிலம் பேசுகின்றனர். கிராமத்து குழந்தைகளும் பேச வேண்டும் என்பதற்காகத்தான் சமச்சீர் கல்வியை கொண்டு வர வேண்டும் என்கிறேன்.
தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட இரண்டு ரூபாய்க்கு கிலோ அரிசி, இலவச கலர் டிவி போன்ற திட்டங்களை கர்நாடகத்திலும் குஜராத்திலும் அறிவித்ததால் தான் காங்கிரஸ் தோல்வியடைந்தது.
தேர்தல் காலத்தில் ஆளுங்கட்சியினர் உங்களை வெற்றிலை, பாக்கு தட்டுடன் பணம் கொடுத்து சத்தியம் பெற்று ஓட்டு போட சொல்வார்கள். அவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு எனக்கு ஓட்டு போடுங்கள்.
போலீசார் ஆளும் கட்சியினருக்கு ஜால்ரா போடுகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. கொடைக்கானல் வரை தீவிரவாதிகள் வந்துவிட்டனர். இந்தியா முழுவதும் தீவிரவாதம் பரவிவிட்டது.
பிறந்தநாள் வேண்டாம் என முதல்வர் அறிவித்தார். ஆனால், அமைச்சர் அன்பழகன் பிறந்தநாள் கொண்டாட கூறுகிறார். ஓகேனக்கல் பிரச்னையை மறைக்க இதுபோல் கூறுகின்றனர்.
யாருடனும் கூட்டணி இல்லை என்பதால் பல எதிர்ப்புகளை நான் சந்தித்திருக்கிறேன். ஆனால் நீங்கள் என்னை காணும் போது உங்கள் முகத்தில் ஏற்படும் சிரிப்பில் அவற்றை எல்லாம் மறக்கிறேன்.
எனக்கு தற்போதும் பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் நான் நடிப்பதற்கு காரணமே தர்மம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.
விஜய்காந்துக்கு டி.ராஜேந்தர் சவால்:
இந் நிலையில் லட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர் தேனியில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு நிருபர்களிடம் பேசுகையில்,
நான் தயாரித்து இயக்கி வரும் ஒருதலைக்காதல், கருப்பனின் காதலி ஆகிய 2 படங்களுக்கு லொக்கேஷன் பார்க்கவும், கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசிக்கவும் தேனிக்கு வந்துள்ளேன்.
மணல் கொள்ளை பகல் கொள்ளையாக நடந்து வருகிறது. ப.சிதம்பரத்தின் குளறுபடியால் அரசின் சலுகைகளை இடைத் தரகர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கருப்பு எம்.ஜி.ஆர். என்று சொல்லிக்கொண்டு ஆட்சியை பிடித்துவிடலாம் என்பது விஜயகாந்தின் கனவுதான். சிவப்பு எம்ஜிஆரைப்போல், கருப்பு எம்ஜிஆர் வேஷம் மக்களிடம் எடுபடாது. துணிவிருந்தால் விருத்தாச்சலம் தொகுதியில் மீண்டும் விஜயகாந்த் போட்டியிட தயாரா?
ஊழலின் மொத்த உருவம் தே.மு.தி.க. ஏனெனில் இந்த கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் ஊழலில் திளைத்தவர்கள். கட்சியில் பொறுப்பு கொடுக்க பணம் வசூலிக்கிறார்கள். கங்கையில் குளித்தாலும் காகம் வெள்ளையாக முடியாது. அதுபோல ஒருபோதும் விஜயகாந்தால் கருப்பு எம்.ஜி.ஆராக முடியாது என்றார்.