For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணக்காரர்களுக்கு ஒரு விலை, ஏழைகளுக்கு ஒரு விலை-விஜய்காந்த் யோசனை

By Staff
Google Oneindia Tamil News

Vijayakanth
சென்னை: பெட்ரோலிய பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யும் போது இரட்டை விலைக் கொள்கையை இந்திய அரசு கடை பிடிக்க வேண்டும். ஏழை, நடுத்தர மக்களுக்கு ஒரு விலையையும் ஆடம்பர வாகனங்களை பயன்படுத்தும் பணக்காரர்களுக்கு கூடுதல் விலையிலும் பெட்ரோல், டீசலை வழங்கலாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய அரசு பெட்ரோலிய பொருட்களின் விலையை சற்றும் எதிர்பாராத அளவிற்கு உயர்த்தியுள்ளது. ஏற்கனவே விஷம் போல் ஏறி வரும் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை செலவு சுமார் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றில் விலைகளை உயர்த்தியுள்ளது, வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சியது போலாகும்.

உலகச் சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்துள்ளதால் இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்று அரசு விளக்கம் தருகிறது. ஆனால் உண்மையில் வரியின் அளவு பெட்ரோல் விலையை பொருத்து அமைவதால், பெட்ரோலிய பொருட்களின் விலை ஏறும் போதெல்லாம், இந்திய அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது.

இந்த கூடுதல் வருமானத்தை இந்திய அரசு விட்டுக்கொடுத்து, வரியை ஒரே நிலையில் வைத்திருந்தால், பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை. பெட்ரோலின் விலையில் கிட்டத்தட்ட பாதிக்கு பாதி வரியாகத்தான் அரசுக்குப் போகிறது.

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, வாங்கும் பொருட்களின் விலைவாசியை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல் போக்குவரத்து செலவையும் அதிகரிக்கும். ஏற்கனவே மூன்று வேளை உணவு இரண்டு வேளையாகி, இரண்டு வேளை, ஒரு வேளையாகி ஒரு வேளை அரை பட்டினியாகி குடும்பத்தை நடத்தும் சூழ்நிலையில் இந்த கூடுதல் செலவுக்கு ஏழை, நடுத்தர மக்கள் எங்கே போவார்கள்?

இந்திய அரசு தனது செலவை சரிக்கட்ட ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடியும். ஆனால் ஏழைகளுக்கு வருமானம் பெருக மத்திய, மாநில அரசுகள் கண்ட வழி என்ன?

பணக்காரர்கள், அளவுக்கு அதிகமான சொத்து வைத்திருப்பார்கள் இத்தகைய விலை உயர்வுகளை தாங்க முடியும். ஏழை, நடுத்தர மக்களால் தாங்க முடியுமா?

இதனால் பெட்ரோலிய பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யும் போது இரட்டை விலைக் கொள்கையை இந்திய அரசு கடை பிடிக்க வேண்டும்.

ஏழை, நடுத்தர மக்களின் அத்தியாவசியமான பயணங்களுக்கு குறைந்த விலையிலும், ஆடம்பர வாகனங்களை பயன்படுத்தும் பணக்காரர்களுக்கு கூடுதல் விலையிலும் பெட்ரோல், டீசலை வழங்கலாம். இதனால் ஓரளவுக்கு சாதாரண மக்களின் வாழ்க்கை சுமை குறையும்.

காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் அரசின் விலை உயர்வு முடிவை எடுக்க துணை போகின்றன. வெளியில் இருந்து மத்திய அரசுக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன. ஆனால் இதற்கு நேர்மாறாக மக்களிடையே இதே கட்சிகள் மத்திய அரசின் முடிவை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றன. சில கட்சிகள் தங்களை அரசியலில் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய ஊமைகளாக உள்ளனர்.

பாதிக்கப்படுவதோ மக்கள். பரிகாரம் தேட வேண்டிய அரசியல் கட்சிகள் ஆட்சியில் சேர்ந்து பாதகமான முடிவு எடுப்பதும், வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதும், மக்களை ஏமாற்ற நடத்தும் கபட நாடகமா? என்று கேட்க விரும்புகிறேன்.

உள்ளதை சொல்லி நல்லதை செய்யும் அரசியலும், ஆட்சியும் என்றைக்கு நாட்டில் மலருமோ அன்றைக்கு தான் ஏழைகளுக்கு விடிவு காலம் ஏற்படும் என விஜயகாந்த் கூறியுள்ளார்.

சரத்குமார் யோசனை:

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சரத்குமார் கூறியிருக்கிறார்.

கில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பல வகையிலும் மக்கள் பொருளாதார நெருக்கடிகளால் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களை மேலும் சித்ரவதை செய்வது போல் தற்போது மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களை விலையேற்றம் செய்து மாபெரும் நெருக்கடியை மக்கள் மீது சுமத்தியிருக்கிறது.

பணவீக்கத்திற்கும், அனைத்து விலைவாசி உயர்வுக்கும் காரணமாக விளங்க கூடிய பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை கடுமையாக உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இந்த விலையேற்றத்திற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதை மத்திய அரசு வழக்கம் போல் காரணம் காட்டுகிறது. ஆனால் வளர்ந்த நாடுகளில் தனிநபர் வருமானம், வாழ்க்கை தரம், அவர்களுக்கு அரசாங்கம் செய்து கொடுத்திருக்கும் வசதி வாய்ப்புகள், அரசியல்வாதிகளின் ஊழலற்ற நேர்மையான நிர்வாகம்,

நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஆதாரங்களை பயன்படுத்தும் செம்மை, இவற்றை கருத்தில் கொண்டு வளர்ந்த நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்திற்கு நம்மையும் எப்போது இவர்கள் அழைத்து போவார்களோ என்ற ஏக்கமே இந்திய மக்களை வாட்டி வதைக்கிறது.

நீண்டகால திட்டமிடல், மாற்று எரிசக்தியை பயன்படுத்துதல், புதிய எண்ணை வளங்கலை கண்டுபிடித்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல், எரிபொருள் சிக்கனத்தை ஊக்குவித்தல் என அறிவுசார் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் சர்வதேச சந்தையையே காரணம் காட்டி தொடர்ந்து விலைவாசியை ஏற்றுவதை வாடிக்கையாக கொண்டால் மக்கள் மத்தியில் அது மாபெரும் அவநம்பிக்கையை உருவாக்கிவிடும்.

எண்ணை வள நாடுகள் கச்சா எண்ணை விலையை குறைத்திட அவர்களை வலியுறுத்த கோரி உலக நாடுகளை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சரத்குமார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X