For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அகதிகள் போர்வையில் ஊறு விளைவித்தால் .. கருணாநிதி எச்சரிக்கை!

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுறுவி, இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்போரை அனுமதிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விடுதலைப் புலிகளுக்கு முதல்வர் கருணாநிதி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் மாநாட்டுக் கூடத்தில், முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளின் 2 நாள் மாநாடு தொடங்கியது.

மாநாட்டின் தொடக்கமாக ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் கூட்டுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி உரையாற்றினார்.

கருணாநிதியின் பேச்சு ..

தமிழக அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் சிலவற்றை சில மாநிலங்கள் முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தை ஆந்திர அரசு அண்மையில் தொடங்கியிருக்கிறது.

இதுபோன்ற திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றுவது காரணம் இந்த அரசு மட்டுமே இதை செம்மையாக நிறைவேற்றி வரும் அதிகாரிகளும் தான் என்பதை நான் நன்கு அறிவேன்.

என்னை நேரடியாக அணுகுங்கள்:

திட்டங்களை அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல் படுத்திட வேண்டும். பெரும் திட்டங் களை நடைமுறை படுத்துவதில் ஏதாவது சிக்கல் இருந்தால் அதனை தீர்ப்பதற்காக நீங்கள் என்னை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

கடும் குற்றம் புரிவோர், கூலிப்படையினர், பொது மக்களை அச்சுறுத்தும் சமூக விரோதிகள் ஆகியோருக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்.

தலைவர்களின் சிலைகளை சிதைத்து சேதப்படுத்தும் சமூக விரோத சக்திகளை இனங்கண்டு அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களை தயாரித்து விற்பவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல் நிலையங்களில் கண்ணியம் தேவை:

காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொது மக்களை கண்ணிய மாகவும், மரியாதையாகவும் நடத்த வேண்டும். முதல் தகவலறிக்கை பதிவு செய்வதில் கால தாமதமோ, அலைக்கழித்தலோ கூடாது.

சொத்து தகராறு நிலமாற்றம் போன்ற உரிமையியல் வழக்குகளில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு கட்டப்பஞ்சாயத்து போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

வகுப்புவாதமும், சாதிய உணர்வும் தமிழ் மண்ணில் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். தீவிரவாத அமைப்புகள் தமிழ்நாட்டில் காலூன்ற எந்த வகையிலும் இடம் அளித்திட காவல்துறை விரைந்து செயல்பட்டு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிட வேண்டும்.

இறையாண்மைக்கு ஊறு விளைவிக்க கூடாது:

அகதிகள் என்ற போர்வையில் இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பவர்களை தமிழ்நாட்டில் ஊடுருவ அனுமதிக்கக் கூடாது.

போலி குடும்ப அட்டைகளை கண்டுபிடித்து அழித்திடும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட வேண்டும். இலவச கலர் டிவி, இலவச எரிவாயு, நிலம் இல்லாதவர்க்கு நிலம் வழங்கும் திட்டம், வீடு, மனை, வழங்கும் திட்டம், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டம் முன்னுரிமை கொடுத்து நிறைவேற்ற வேண்டும்.

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு தொடர் கடன்கள் வழங்கும். புதிய குழுக்களை அமைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்க அனைத்து கிராமங்களுக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் திட்டங்கள் நிறைவேற்ற வேண்டும்.

மக்களுக்கு பயன் அளிக்கும் அரசினுடைய பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட நிர்வாகம் சிறப்புற செயல்படுத்த வேண்டும்.

இதற்காக மாவட்ட கலெக்டர்கள் களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கும் அரசுக்கும் இடையே நல்லுறவு பாலமாக அதிகாரிகள் திகழ வேண்டும் என்றார் கருணாநிதி.

மாநாட்டில், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மு.க.ஸ்டாலின், பொன்முடி ஆகியோரும் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி உள்ளிட்ட அனைத்துத் துறை செயலாளர்களும் பங்கேற்றனர்.

டிஜிபி ஜெயின், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சேகர், புறநகர் ஆணையர் ஜாங்கிட், ஐஜிக்கள், டிஐஜிக்கள், மாவட்ட எஸ்.பி.க்கள், டிஎஸ்பி, உதவி எஸ்பிக்கள் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இன்று நடைபெறும் மாநாட்டில் கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் இரு பிரிவினரும் பங்கேற்கின்றனர். நாளை கலெக்டர்கள் மட்டும் கலந்துகொள்ளும் மாநாடு நடைபெறுகிறது.

இரண்டு நாள் மாநாட்டையொட்டி தலைமைச் செயலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X