கவிஞர்களில் பேரரசு வைரமுத்து: கருணாநிதி
கவிஞர் வைரமுத்து-பொன்மணியின் மகன் மதன் கார்க்கி-நந்தினி திருமணம் சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. அரசியல் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் பங்கேற்று மணமக்களை நேரில் வாழ்த்தினார்கள்.
மணமக்களை முதல்வர் கருணாநிதி வாழ்த்திப் பேசியதாவது:
வைரமுத்துக்கும் எனக்கும் உள்ள நட்பு 25 ஆண்டுகாலம் வளர்ந்து வளம் பெற்றுள்ள நட்பாகும். தினந்தோறும் காலையில் 7 மணிக்கு வைரமுத்து என்னுடன் தொலை பேசியில் பேசுவார் என்று கனிமொழி கூறினார். அதை நான் சொல்லிதான் கனிமொழிக்கே தெரியும். ஏனென்றால் அவர் காலையில் 7 மணிக்குப் பிறகுதான் படுக்கையிலிருந்து எழுவது வழக்கம்!.
நான் யோகா பயிற்சி முடித்த பிறகு காலையில் 7 மணிக்கு எனது வீட்டு தொலைபேசி ஒலிக்கும். அது கவிஞரின் அழைப்பு என தெரிந்து கொள்வேன். நாங்கள் இருவரும் நாட்டு நடப்பு, அரசியல், கலை பற்றி பேசுவோம்.
சூப்பர் ஸ்டாரைத் தவிர இங்குள்ள பலரும் நான் கொடுத்த பட்டங்களை வைத்தே அழைக்கப்படுகிறார்கள். இசைஞானி இளையராஜா, கலைஞானி கமல், காவியக் கவிஞர் வாலி என்றெல்லாம் பட்டங்கள் வழங்கிய நான், வைரமுத்துக்கு 'கவிப் பேரரசு' என்ற பட்டத்தை வழங்கினேன். அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்களையெல்லாம் விட அப்படி என்ன உயர்ந்தவர் அவர் என்று அப்போது கேட்டனர் என்னிடம்.
அதற்கு, நான் சொன்னது சரி என்று கவிஞர் சில ஆண்டுகளில் நிரூபித்துக் காட்டுவார் என்று சொன்னேன். அதை தனது 'கள்ளிக்காட்டு இதிகாசம்', 'கருவாச்சி காவியம்' மூலம் அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
இங்கு பேசிய பாரதிராஜா உள்ளிட்டோர் இது எங்கள் வீட்டு திருமணம் என்று குறிப்பிட்டனர். இல்லை, இது என் வீட்டுத் திருமணம். அந்த உரிமையை யாரும் பறித்துக் கொள்ள விடமாட்டேன். என் தம்பி வீட்டுத் திருமணத்தில் எனக்கில்லாத உரிமையா? இது காதல் திருமணம். இவர்களது காதலை ஏற்க வைரமுத்துவின் உள்ளத்தில் ஆறுதலை ஏற்படுத்தியது நான்தான்.
காதலை எதிர்ப்போர் யாராக இருந்தாலும், அது தாயாக இருந்தாலும் அவர் மூடன் என்று சொல்லிய பாரதியின் கவிதை வரிகளை எடுத்துக் கூறி வைரமுத்துவை, பொன்மணியை அவர்களது மகனின் காதலை ஏற்கச் செய்தேன்.
அந்த உரிமை எனக்கு உள்ளது என்று சொன்னேன். அப்படி சொல்லும்போது, கோபாலபுரத்தில் நடக்கும் பல திருமணங்கள் என் என்னையும் மீறி நடந்த காதல் திருமணங்களே என்பதை எடுத்துச் சொன்னேன்.
கோபாலபுரத்தையும் தாண்டி சி.ஐ.டி நகர் காலனியிலே நடந்த திருமணமும்கூட அத்தகையதே என்பதையும் புரிய வைத்தேன். காதலுக்கு எப்போதும் வழிவிடுகிற குடும்பத் தலைவனான இந்தக் கருணாநிதிக்கு இந்த அறிவுரையை யாருக்கும் சொல்ல உரிமையுண்டு...
கார்க்கி என்ற பெயரை எந்த அன்போடும், காதலோடும் வைத்தாயோ அந்த கார்க்கியின் காதலை ஏற்றுக்கொள் என்று சொன்னேன். வைரமுத்து தம்பதியை அதற்கு சம்மதிக்க வைத்த எனக்குத்தான் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும் என்றார் கருணாநிதி.
இளையராஜாவின் மனைவி வாழ்த்து:
திருமணத்துக்கு இசையமைப்பாளரும் வைரமுத்துவை தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தவருமான இளையராஜா வருவார் என காலையிருந்தே பரபரப்பாகப் பேசிக் கொண்டனர். ஆனால் அவருக்குப் பதில் அவரது மனைவி ஜீவா வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்.













Click it and Unblock the Notifications