கள்ள நோட்டில் குவார்ட்டர் வாங்கி மாட்டிய குடிமகன்கள்
பணகுடி: ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்களைக் கொடுத்து குவார்ட்டர் வாங்கிய குடிமகன்கள் இருவரை பணகுடி போலீசார் நேற்று கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் களக்காட்டை அடுத்த சிதம்பராபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் நித்தியராஜ். இவர் நேற்று இரவு பணகுடி மெயின் பஜாரில் உள்ள டாஸ்மக் கடையில் 1000 ரூபாய் கொடுத்து ஒரு குவார்ட்டர் மதுபானம் வாங்கியுள்ளார்.
அடுத்த அரைமணி நேரத்தில் டாஸ்மக் கடைக்கு மீண்டும் வந்து ஆயிரம் நோட்டை கொடுத்து மீண்டும் மதுபானம் கேட்டுள்ளார். இதனால் அவர் கொடுத்த ஆயிரம் ரூபாய் மீது சந்தேகம் கொண்ட டாஸ்மாக் விற்பனையாளர் வெங்கடேஷ் பணகுடி போலீசுக்குத் தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து வந்து நித்தியராஜீடம் விசாரணை நடத்தி பணகுடியில் அவர் தங்கியிருந்த தனியார் விடுதி அறையில் சோதனை போட்டனர். இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு லட்ச ரூபாய் கள்ள நோட்டுகளைக் கைப்பற்றினர். எல்லாமே ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள்தான்.
மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளத்தை சேர்ந்த பால்ராஜ் என்பவர்தான் பணகுடி பகுதியில் சிலரிடம் பல மாதங்களாக கள்ள நோட்டுகளை கொடுத்து புழக்கத்தில் விட்டதாகவும் அவரிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்து ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை வாங்கியதாகவும் தெரிவித்தார்.
இந்தப் பணத்தை கொண்டு நாளை மும்பை செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து பேய்குளத்தில் உள்ள பால்ராஜ் வீட்டிற்கு சென்று போலீசார் சோதனையிட்டதில் அங்கு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை கைப்பற்றினர். பால்ராஜீடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
