For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழகிரியின் கேபிள் டிவியால் அச்சத்தில் மதுரை: ஜெ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சுமங்கலி கேபிள் விஷனுக்குப் போட்டியாக மு.க.அழகிரி தொடங்கியுள்ள ராயல் கேபிள் விஷன் நிறுவனத்தால், கேபிள் டிவி ஆபரேட்டர்களும், மதுரை மக்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

அண்மையில் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி, மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ராயல் கேபிள் விஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி இருப்பதையும், அது விரைவில் தென் மாவட்டங்கள் முழுவதும் விஸ்தரிக்கப்படும் என்றும் அறிவித்து இருப்பதையும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

இதன் விளைவாக மாறன் குடும்பத்திற்கு சொந்தமான சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்திற்கும், ராயல் கேபிள் விஷன் நிறுவனத்திற்கும் மிகப் பெரிய அளவில் தற்போது தகராறு ஏற்பட்டுள்ளது.

டிராய் விதிப்படி பொதுமக்கள் பார்ப்பதற்கு வசதியாக தொலைக்காட்சி நிறுவனங்கள் கேபிள் நிறுவனங்களுக்கு தங்கள் சேனல்களை பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என்று ராயல் கேபிள் விஷன் நிறுவனமும், கேபிள் ஆப்பரேட்டர்களை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மு.க.அழகிரி மிரட்டுகிறார் என்று சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனமும் ஒன்றையொன்று பரஸ்பரம் குற்றம் சாட்டி அறிக்கை போரில் இறங்கியுள்ளன.

இதன் விளைவு என்னவென்றால் அனைத்துத் தொலைக்காட்சி சேனல் களையும் பார்க்க முடியாத அளவுக்கு மதுரை மாவட்ட மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள் ராயல் கேபிள் விஷனில் இணையுமாறு ஆளும் கட்சியினரால் மிரட்டப்படுகிறார்கள் என்றும், இது குறித்த புகாரை காவல் துறையினர் ஆளுங்கட்சியின் தலையீடு காரணமாக வாங்கவே மறுக்கின்றனர் என்றும் தகவல்கள் வருகின்றன.

திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பப் பிரச்சனை காரணமாக தமிழக மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

மாறன் குடும்பத்திற்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் இடையே பிரிவினை ஏற்பட்டதன் காரணமாக கருணாநிதி குடும்பத்திற்கு வருமானம் வருவது நின்று விட்டது. இதில் தன் மகன் மு.க.அழகிரியின் பக்கம் நின்று குடும்ப வருமானத்தைப் பெருக்க கருணாநிதி தயாராகி விட்டார்.

மதுரையில் தற்போது நிலவும் பிரச்சனை குறித்து திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதியிடம் கருத்து கேட்கப்பட்டபோது, அரசு கேபிள் கார்ப்பரேஷன் என மாநில அரசின் பொதுத்துறை நிறுவனத்தை தமிழக அரசே தொடங்கி நடத்த இருக்கிறது. அதன் மூலம் இந்தத் தொழிலில் ஈடுபட்டு உள்ள அனைவரின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று கூறுகிறார்.

கருணாநிதியின் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் பிரச்சனை ஏற்பட்ட ஒருசில மாதங்களிலேயே இரண்டு தொலைக்காட்சி சேனல்களை ஆரம்பித்த கருணாநிதிக்கு அரசின் பொதுத்துறை நிறுவனத்தை தொடங்க என்ன தடை இருக்க முடியும்? ஏன் இதில் தாமதம்? எல்லாம் சுயநலம்தான். அப்படி அரசு கேபிள் கார்ப்பரேஷன் வந்தாலும் அதில் அரசியல் தலையீடு இல்லாமல் இருக்குமா என்பதற்கும் எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.

தன்னுடைய மகனை மீறி தைரியமாக செயல்படக் கூடிய நிலைமையில் திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதி இல்லை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. பல்வேறு துன்பங்களை கவலையை மறந்து ஏதோ சிறிது நேரமாவது தொலைக் காட்சியில் தங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சியைப் பார்த்து பொழுதைக் கழிப்போம் என்றால் அதற்கும் வழியில்லாத நிலை தற்போது மதுரை மாவட்டத்தில் உருவாகி இருக்கிறது.

முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் படுகொலை, தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு அதன் காரணமாக மூன்று பேர் மரணம் ஆகிய நிகழ்ச்சிகளின் காரணமாக பொதுமக்களும், கேபிள் டிவி ஆபரேட்டர்களும் செய்வதறியாமல் திகைக்கின்றனர்.

மரண பயம் அவர்களை தற்போது கவ்விக் கொண்டிருக்கிறது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், பொதுமக்கள் அஞ்சி, நடுங்கி, அடிமைகள் போல வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

கருணாநிதிக்கு நாட்டு மக்களின் மீது அக்கறை இருக்குமானால் மதுரை மாவட்ட மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அனைத்துத் தொலைக்காட்சி சேனல்களை கண்டு மகிழ்வதற்கும் அங்குள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நிம்மதியாக இருப்பதற்கும், நியாயமான வழிமுறையை சுயநலமின்றி வகுக்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X