நாகை மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு விரட்டியது இலங்கை கடற்படை!

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டனம்: நேற்று 2 மீனவர்களை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படை, இன்றும் நாகை மாவட்ட மீனவர்களை எச்சரித்து துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்ட மீனவர்கள் இருவரை நேற்று இலங்கை கடற்படை தாறுமாறாக சுட்டுக் கொன்றது. ஒருவர் இதில் படுகாயமடைந்தார்.

இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் கொதிப்பில் ஆழ்ந்துள்ள நிலையில் இன்றும் தமிழக மீனவர்களை எச்சரிக்கும் வகையில், துப்பாக்கியால் சுட்டுள்ளது இலங்கை கடற்படை. மீனவர்களின் வலைகள், படகுகளையும் சேதப்படுத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோடியக்கரை அருகே நடுக் கடலில் இந்த சம்பவம் இன்று காலை நடந்தது. நாகை மாவட்ட மீனவர்கள் சிலர் இன்று காலை கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் வந்தனர். சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி வந்து விட்டீர்கள் என்று கூறியபடி வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

பின்னர் ஒரு படகில் ஏறி அதில் இருந்த மீன் பிடி வலைகளை பிய்த்து எறிந்தனர். படகையும்தாக்கினர். பின்னர் மீண்டும் இப்பகுதிக்குள் வந்தால் சுட்டுக் கொன்று விடுவோம் என எச்சரித்து விரட்டினர்.

அதன் பின்னர் மீனவர்கள் நாகை கடற்கரைக்கு விரைந்து வந்து விட்டனர். இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் கூறப்பட்டுள்ளது.

மீனவர் கிராமங்களில் சோகம் - பதட்டம்

இதற்கிடையே, 2 மீனவர்கள் கொல்லப்பட்ட ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் இன்று பெரும் சோகம் நிலவியது. நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இன்று
கடலுக்குள் போகவில்லை.

தொடர்ந்து இந்தப் பகுதிகளில் பதட்டம் நிலவுவதால்,போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை அமைதியாக இருந்தாலும் கிராமங்கள் அனைத்திலும் பதட்டம் காணப்படுகிறது.

--

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...