For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கச்சத்தீவு உரிமைகளை நிலைநாட்டும் நேரம் வந்து விட்டது - கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: கச்சத்தீவில் பல உரிமைகள் நமக்கு இருந்தன. ஆனால் பின்னர் அவையெல்லாம் மாற்றப்பட்டு விட்டன. அந்த உரிமைகளை பெறும் நேரம் வந்து விட்டது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

திமுக உயர் மட்ட செயல் திட்டக் குழுக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசினார்.

அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், முதல்வர் அளித்த பதில்களும்:

கேள்வி: உங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி மத்திய அரசுக்கு ஏன் நெருக்குதல் தரக் கூடாது என எதிர்க்கட்சிகள் கேட்கிறார்களே...

கருணாநிதி: நான் உங்களை எதிர்க்கட்சியாக கருதவில்லை. எனவே நீங்களும் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கக் கூடாது.

கேள்வி: கச்சத்தீவை மீட்டு, தமிழக மீனவர்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்ற கருத்து குறித்து தமிழக அரசின் நிலை ...

கருணாநிதி: இது சட்டப்பிரச்சினை. அதில் நானே முடிவைச் சொல்லி விட முடியாது. கச்சத்தீவை கொடுக்கும்போது அப்போதிருந்த தமிழக திமுக அரசு அதனை வன்மையாக கண்டித்திருக்கிறது.

அப்போது இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். அவர் சமாதானம் செய்து, கச்சத்தீவிலே நமக்குள்ள உரிமைகளுக்கெல்லாம் வழி வகுத்து விதிகள் செய்யப்பட்டன.

அந்த உரிமைகள் - தேவலாயத்திற்கும், கிறிஸ்தவ ஆலயத்திற்கும் சென்று வருவதற்கான உரிமை, மீன்களைக் காய வைப்பதற்கும், மீன் பிடிப்பதற்கும் உள்ள உரிமை, நம்முடைய மீனவர்கள் அங்கே தங்கள் வலைகளைக் காயப்போடுவதற்கான உரிமை என்று பல உரிமைகள் நமக்கு இருந்தது.

ஆனால் நெருக்கடி நிலைக்குப் பிறகு 1976ல் நம்முடைய ஆட்சி இல்லை. கவர்னர் ஆட்சிதான் இருந்தது. கவர்னர் ஆட்சியில் அந்த விதிகள் எல்லாம் மாற்றப்பட்டு விட்டன. அது தொடர்ந்து இப்போதும் இருக்கிறது. இதை நாமும் பலமுறை அந்த விதிமுறைகளையெல்லாம் கொண்டு வர வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இப்போது அதற்குரிய நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன்.

கேள்வி: இலங்கையில் உள்ள தூதுவராக ஒருதமிழரை நியமிக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்ைக வைத்துள்ளார்களே ...

கருணாநிதி: பல வழிமுறைகளில் அதுவும் ஒன்று. ஆனால் அதுவே முக்கியமான காரணம் என்று சொல்லி விட முடியாது.

கேள்வி: தமிழக மீனவர்கள், இலங்கை கடற்கரை ஓரத்திற்கு சென்றுதான் மீன் பிடிக்கிறார்கள், அதற்கு சாட்டிலைட் ஆதாரம் இருப்பதாக இலங்கை சொல்கிறதே ...

கருணாநிதி: ஒரு அங்குலமோ, இரண்டு அங்குலமோ, ஒரு அடியோ, இரண்டு அடியோ, தவறி வரையறுக்கப்பட்ட கோட்டினை விட்டு, தமிழ்நாட்டு மீனவர்கள் சென்று விட்டால், அதற்காக அவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று எதுவும் இல்லை.

எச்சரித்து அனுப்பலாம் அல்லது கைது செய்து உடன்பாட்டுப் பேச்சு பேசி வழக்கமாக அனுப்புவது போல அனுப்பலாம். மாறாக இப்படி திடீர் திடீரென்று அவர்களைச் சுட்டுக் கொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

கேள்வி: மத்தியில் நிலவும் பிரச்சினை குறித்து உங்களது கருத்து ...

கருணாநிதி: எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும் என்பதே எனது பதில்.

கேள்வி: காங்கிரஸை மூழ்கும் கப்பல், கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிலிருந்து வெளியேறி விட வேண்டும் என பிரகாஷ் காரத் கூறியுள்ளாரே ...

கருணாநிதி: என்னுடைய அரசியல் பண்பாடு, நான் ஏற்றுக் கொண்டிருப்பது, நேற்று வரையில் உறவோடு இருந்து விட்டு, ஒரு பிரச்சினை அல்லது ஒரு பிரிவினை வந்து விட்ட பிறகு, கடுமையாகவோ, காரசாரமாகவோ அவதூறாகவோ பேசுவதை நான் விரும்புவதில்லை.

கேள்வி: நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெல்லுமா ...

கருணாநிதி: நம்பிக்கை இருக்கிறது.

கேள்வி: திமுக எம்.பிக்கள் அனைவரும் உங்களது கொறடா உத்தரவை ஏற்று வாக்களிப்பார்களா அல்லது எதிர்த்து வாக்களிப்பார்கள் என்ற அச்சம் இருக்கிறதா ...

கருணாநிதி: நான் பத்திரிக்கைகளைப் படித்து குழப்பிக் கொள்வதில்லை.

கேள்வி: கொறடா உத்தரவை மீறி யாரேனும் செயல்பட்டால் நடவடிக்கை இருக்குமா ...

கருணாநிதி: என்ன நடவடிக்கை என்று வகுக்கப்பட்டிருக்கிறதோ அந்த நடவடிக்கை இருக்கும்.

கேள்வி: இவ்வளவு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி, ஆட்சி கவிழ்ந்தால் மறுபடியும் மக்களின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்குமா, இப்படி செய்வதால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடியவாய்ப்பு ஏற்படுமே இதை ஒரு பிரச்சினையாக செய்வது தேவைதானா ...

கருணாநிதி: ஜனநாயகத்தை விரும்புகிற மக்களுக்கு இப்படி ஒரு அரசைக் கவிழ்த்தவர்கள் மீது நிச்சயமாக கோபம் ஏற்படும்.

கேள்வி: இப்படி ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி விட்டார்களே என்று மன்மோகன் சிங், ராகுல் காந்தி, காங்கிரஸ் மீது உங்களுக்கு கோபம் இல்லையா ...

கருணாநிதி: இப்படிக் கேட்பதுதான் எனக்கு கோபத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.

கேள்வி: அணு பிரச்சினைக்காக ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்று செயல்படுகிறவர்கள் மீது மக்களுக்கு கோபம் ஏற்படாதா ...

கருணாநிதி: அணுவும் நமக்கு தேவைதானே .. வளர்ந்து வருகிற விஞ்ஞான யுகத்தில் அதுவும் நமக்கு தேவைதான் என்றார் முதல்வர் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X