For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலைவாணர் அரங்கம், ராஜாஜி மண்டபம் இடிப்பில்லை-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள புகழ் பெற்ற கலைவாணர் அரங்கமும், ராஜாஜி மண்டபமும் இடிக்கப்படாது என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில், தமிழக அரசின் இலவச கலர் டிவி வழங்கும் விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், எங்கே ஓட்டை, எங்கே குறை, எங்கே குற்றம் என்று சில பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். வேண்டாமென்று சொல்லவில்லை. வள்ளுவரின் வாக்கின்படி நாம் குறைகளைச் சொல்ல வேண்டும், அப்போது தான் நாங்களும் திருந்த முடியும். ஏதோ ஏனோ தானோ வென்று - போகிற போக்கில் புழுதியை வாரித் தூற்றாதீர்கள்.

மின்சாரப் பற்றாக்குறை - நாங்களும் உணர்ந்தோம். இங்கு மாத்திரமல்ல, மத்திய மின்சாரத் துறை மந்திரி மராட்டியத்தைச் சேர்ந்தவர். மராட்டியத்திலே 4000 மெகாவாட் பற்றாக்குறை என்கிறார். அவரிடம் எங்களுடைய பற்றாக்குறையைப் போக்குங்கள் என்று கேட்டோம். பிரதமரின் ஆணையைப் பெற்று அவர், நாள் ஒன்றுக்கு 100 மெகாவாட் ஒரு மாதத்திற்கு தருகிறோம், எப்படியாவது பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதற்குப் பிறகும் தொடர்ந்து தருவார்கள்.

அது மாத்திரமல்ல, நெய்வேலியைப் போல அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டில் இரண்டு பெரிய மின்சாரத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஏறக்குறைய 30 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு தன்னுடைய சொந்தச் செலவிலேயே கடலூர், மரக்காணம், செய்யூர் ஆகிய இந்த மூன்று ஊர்களில் இரண்டு ஊர்களிலே அந்தத் திட்டத்தை நிறைவேற்றவும் மத்திய அரசு நமக்கு அனுமதி அளித்திருக்கிறது.

மூன்று பெரிய உலகளாவிய பல்கலைக் கழகங்களை தமிழகத்தில் நாம் உருவாக்க மத்திய அரசின் அனுமதி கிடைத்திருக்கிறது. அதிலே ஒன்று திருவாரூரிலே உலகளாவிய ஒரு பல்கலைக் கழகம் - அதற்கான வேலைகளைத் தொடங்கிட வருகின்ற 29-ம் தேதி மத்திய அரசிலிருந்து குழுவினர் வருகிறார்கள். அந்த மூன்று பெரிய பல்கலைக் கழகங்களைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளும் வரவுள்ளன. இவ்வளவும் நம்முடைய முயற்சியாலும், நமக்கு உதவிக் கரம் நீட்டுகின்ற மத்திய அரசின் முயற்சியாலும் நடைபெற்றுக் கொண்டிருப்பவை. இவை எல்லாம் நடக்கும்போது என்ன சொல்கிறார்கள்?

ஒரு பள்ளிக் கூடத்திலே ஆசிரியர் பாடங்களைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, ஒரு பையன் மாத்திரம், படிப்பைக் கவனிக்காமல் சுவரிலே உள்ள ஒரு ஓட்டையில், ஒரு எலிக் குஞ்சு உள்ளே நுழைந்து கொண்டிருப்பதையே பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனைப் பார்த்து ஆசிரியர், என்னப்பா நான் சொன்னதெல்லாம் உன் காதிலே நுழைந்ததா என்று கேட்கிறார். எல்லாம் நுழைஞ்சது சார், வால் மாத்திரம் இன்னும் நுழையவில்லை என்று சொன்னானாம். அது மாதிரி நாட்டிலே இன்றைக்கு சிலபேர் இருக்கிறார்கள்.

இவ்வளவும் நாம் சொன்னால்கூட அவர்களுக்கு இதெல்லாம் நுழைவதில்லை. காரணம், காதிலே, கண்ணிலே வால் மாத்திரம் நுழையாதது தான் பாக்கி இருக்கிறது. அதனால் நாம் அவர்களைப் பற்றி யெல்லாம் கவலைப்படாமல் - அவர்களுடைய வார்த்தைகளை அலட்சியப்படுத்தி - அவர்களை அலட்சியப்படுத்தாமல் - அவர்களுடைய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களையும் திருத்த வேண்டியது நம்முடைய கடமை என்கிற உணர்வோடு நாம் நம்முடைய பணியைத் தொடருவோம்.

கலைவாணர் அரங்கத்தை ஏதோ இடிக்கப் போகிறோம் என்றெல்லாம் கூட பத்திரிகைகளிலே செய்தி வந்தது. அப்படி யாரும் கலைவாணர் அரங்கத்தை இடிப்பதற்கான எந்த முயற்சியையும் செய்யவில்லை. கலைவாணர் அரங்கம் ஏற்கனவே பாலர் அரங்கம் என்றிருந்ததை புதுப்பித்துக் கட்டி, கலைவாணர் அரங்கம் என்று பெயர் வைத்தவனே கருணாநிதிதான். ஆகவே கலைவாணர் அரங்கத்திற்கோ, ராஜாஜி மண்டபத்திற்கோ எந்த ஆபத்தும் வராது.

கலைவாணர் அரங்கத்திலே நாங்கள் கை வைக்கிறோம் என்றால், இதை இன்னும் பெரிதுபடுத்தி மலேசியாவிலே, சிங்கப்பூரிலே இருப்பதைப் போல வசதி மிக்கதாக வனப்பு மிக்கதாக ஆக்குகின்ற அந்த முயற்சிக்காகத் தான் இதிலே கை வைப்போமே தவிர, இதனை இடிக்கின்ற நோக்கத்தோடு கை வைக்க மாட்டோம் என்றார் முதல்வர் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X