For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அகமதாபாத் குண்டுவெடிப்புகள்: பலி 49 ஆனது

By Staff
Google Oneindia Tamil News

அகமதாபாத்: அகமதாபாத்தை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. 162க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

பெங்களூரில் தொடர் குண்டுவெடிப்பு நடந்த அடுத்த நாளே அகமதாபாத்தில் அடுத்தடுத்து 16 இடங்களில் குண்டு வெடித்து நாட்டையே உலுக்கி விட்டது. நேற்று மாலை நடந்த இந்த பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 49 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஜவஹர் செளக், சக்லா, சரங்பூர், அம்ரல்வாடி, கோவிந்த்வாடி-கிஷான்பூர், ஹத்கேஸ்வர், மணி நகர், பாபு நகர், தக்கர் நகர், நரோடா, சர்கேஜ் உள்பட 16 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

சைக்கிள்கள்- டிபன் பாக்ஸ்களில்:

மாலை 6.45 மணியளவில் பாபு நகரில் முதல் குண்டு வெடித்தது.
வெடிகுண்டுள் அனைத்தும் சைக்கிள்கள் மற்றும் டிபன் பாக்ஸ்களில் வைக்கப்பட்டிருந்தன.

குண்டுவெடிப்புகள் நடந்த இடங்கள் பெரும்பாலானவை மார்க்கெட் பகுதிகள் ஆகும்.

மோடி தொகுதியில் 3 குண்டுவெடிப்பு:

இதில் மணி நகர் முதல்வர் நரேந்திர மோடியின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு மட்டும் மொத்தம் 3 இடங்களில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

அங்குள்ள பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்சில் குண்டு வெடித்தது. சைக்கிளில் வெடிகுண்டுடன் வந்த நபர் பஸ் மீது மோதி, குண்டை வெடிக்கச் செய்ததாக தெரிகிறது. இதில் பஸ் பாதி எரிந்து போய் விட்டது.

இந்த பஸ் இயற்கை எரிவாயுவினால் இயங்கக் கூடியது. இதில் குண்டு வெடித்தால் பெருமளவில் உயிர் சேதம் ஏற்படும் என்று கருதித்தான் இதில் குண்டு வைத்துள்ளனர் தீவிரவாதிகள்.

இதுதவிர எல்.ஜி. மருத்துவமனை அருகே ஒரு குண்டு வெடித்தது. சிவில் மருத்துவமனையிலும் ஒரு குண்டு வெடித்தது.

கார் நம்பர் பிளேட் சிக்கியது:

சிவில் மருத்துவமனை அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவ இடத்திலிருந்து ஒரு காரின் நம்பர் பிளேட்டை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

சிவில் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதியில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது. அங்கு ஜி.ஜே 6சிடி 9718 என்கிற எண் கொண்ட நம்பர் பிளேட்டை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதன் மூலம் காரில் குண்டுடன் வந்து மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் இந்தக் கார் சில தினங்களுக்கு முன் திருடப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இந்த பயங்கர குண்டுவெடிப்புகளில் 49 பேர் உயிரிழந்தனர். 162க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

அதேபோல பாபு நகரில், ரயில் நிலையத்திற்கு வெளியே குண்டு வெடித்தது.

சர்கேஜ் பகுதியில், உள்ள தியேட்டர் வளாகத்தில் குண்டு வெடித்தது.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அகமதாபாத்தில் பெரும் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது. தொலைபேசிகள் செயல்படவில்லை. நகர் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டனர். போக்குவரத்து பல இடங்களில் பாதிப்புக்குள்ளானது. குண்டுவெடிப்பு நடந்த பகுதிகளை போலீஸார் சீல் வைத்தனர்.

பெங்களூரைப் போலவே அகமதபாத்திலும் குறைந்த சக்தி கொண்ட குண்டுகளே வைக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குண்டுகளைத் தேடி வேட்டை:

நகரில் மேலும் பல பகுதிகளில் குண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இதையடுத்து நகர் முழுவதும் மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்களுடன் வெடிக்காத நிலையில் இருக்கும் குண்டுகளைத் தேடி வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பு நடந்த இடங்களில் பல முன்பு பெரும் கலவரங்களை சந்தித்த பகுதிகளாகும். எனவே அங்கு மதக் கலவரம் வெடித்து விடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதி விரைவு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு ரோந்து சுற்றி வருகின்றனர்.

அதி விரைவு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு நகர் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து முதல்வர் நரேந்திர மோடி அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார்.

மோடியுடன்,மத்திய உள்துறைச் செயலாளர் மதுகர் குப்தா தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தினார். மத்திய அரசு அனைத்து உதவிகளையும் அளிக்கும் என்று அப்போது மோடிக்கு குப்தா உறுதியளித்தார்.

பிரதீபா பாட்டீல், மன்மோகன் சிங் கண்டனம்:

குஜராத் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மக்கள் அமைதி காக்க வேண்டும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதவியும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் உதவியும் வழங்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.

அதேபோல மாநில அரசின்சார்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சமும், காயமடந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அனைவரும் அமைதி காத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர்மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மும்பை உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பும், பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X