ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீண்டும் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல் நடத்தி அட்டகாசம் செய்துள்ளது. இதில் 40 படகுகள் சேதமடைந்தன. மீன்களையும் கடற்படையினர் கொள்ளையடித்து விட்டுச் சென்றனர்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வதும், தாக்கி படகுகளை சேதப்படுத்துவதும், சிறை பிடித்துச் செல்வதும் தொடர்கதையாக உள்ளது. இதுவரை இதற்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை.

சமீபத்தில் நாகை மாவட்ட மீனவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அனைத்துக் கட்சிகளும் இலங்கை அரசுக்கும், மெளனமாக இருக்கும் மத்திய அரசுக்கும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

மேலும் திமுக சார்பில் தமிழகம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டது.

இதையடுத்து சார்க் மாநாட்டுக்கு கொழும்பு செல்லும்போது, இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பிரதமர் மன்மோகன் சிங் இதுகுறித்து பேசி முடிவு காண்பார் என மத்திய அரசு அறிவித்தது.

இந்த நிலையில் இன்று மீண்டும் இலங்கை கடற்படை தனது வேலையைக் காட்டி விட்டது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 600க்கும் மேற்பட்ட படகுகளில் மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் விரைந்து வந்து முற்றுகையிட்டனர். வானத்தை நோக்கி சுட்ட அவர்கள் பின்னர் படகுகள் மீதும் ஏறி தாக்கினர். இதில் 40 படகுகள் சேதமடைந்தன. பின்னர் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களைப் பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.

அச்சத்தில் உறைந்திருந்த மீனவர்கள், படகுகளுக்குக் கீழ் பதுங்கி உயிர் தப்பினர். பின்னர் அங்கிருந்து கரைக்குத் திரும்பி விட்டனர்.

மறுபடியும் இலங்கை கடற்படையினர் நடத்திய இந்தத் தாக்குதலால் ராமேஸ்வரம் மீனவர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...