For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

40 லட்சம் டிவி வாங்க தமிழக அரசு உலக டெண்டர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் இலவச கலர் டிவி திட்டத்தின் கீழ் 40 லட்சம் கலர் டிவி பெட்டிகளை வாங்க உலகளாவிய டெண்டர் விட முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்குவது குறித்து அமைக்கப்பட்ட முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையிலான சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் 12-வது கூட்டம் 4.9.2008 அன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தி.மு.க. சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் சி.கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்), வை.சிவபுண்ணியம், சட்டமன்ற கட்சித் தலைவர், (இந்திய கம்யூனிஸ்ட்), எச்.அப்துல் பாசித், சட்டமன்ற உறுப்பினர், (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), மு.ஜெகன் மூர்த்தி, சட்டமன்ற கட்சித் தலைவர் (புரட்சி பாரதம்) மற்றும் ரவிகுமார், சட்டமன்ற உறுப்பினர் (விடுதலைச் சிறுத்தைகள்) ஆகியோரும், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, நிதித் துறைச் செயலாளர் கு.ஞானதேசிகன், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் சி.சந்திரமவுலி, வருவாய் துறை செயலாளர் அம்புஜ் சர்மா, வருவாய் நிர்வாக ஆணையர் சக்திகாந்த தாஸ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் தீனபந்து ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம், அண்ணா பிறந்த நாளான 15.9.2006-ல் தொடங்கி வைக்கப்பட்டு, முதற்கட்டமாக 30 ஆயிரம் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளும், அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக 25 லட்சம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து, 2007-2008-ம் ஆண்டில் 34 லட்சத்து 25 ஆயிரம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்திட முதலில் ஆணைகள் வெளியிடப்பட்டு, பின்னர் மேலும் 3 லட்சத்து 25 ஆயிரம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்திடவும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. இதன் மூலம் மூன்றாம் கட்டத்தில் மொத்தம் 37 லட்சத்து 50 ஆயிரம் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளைக் கொள்முதல் செய்திட விதிமுறைகள்படி 10 நிறுவனங்களுக்கு ஆணை வழங்கப்பட்டது.

31.8.2008 வரை 24 லட்சத்து 58 ஆயிரத்து 492 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பொது மக்களுக்கு வழங்கப்படுவதற்காக மாவட்ட கலெக்டர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 12 லட்சத்து 91 ஆயிரத்து 508 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளும் 2008 டிசம்பருக்குள் அளிக்கப்பட்டுவிடும்.

நடைபெற்ற சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தில், தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ் நான்காம் கட்டமாக இந்த ஆண்டில் (2008-2009) 40 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொள்முதல் செய்வதற்காக 2008 செப்டம்பர் மாதத்தில் உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோருவது என்றும், 2008 அக்டோபர் மாத மத்தியில் ஒப்பந்தப் புள்ளிகளை திறப்பது என்றும், அக்டோபர் இறுதியில் ஒப்பந்தப் புள்ளிகளை முடிவு செய்வது என்றும், 2009 ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை 40 லட்சம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளையும் வழங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இத்திட்டத்தில், மூன்றாம் கட்டமாக இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்குவதற்கு முடிவுகள் மேற்கொண்டபோது நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி நெறிமுறைகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கான தொழில்நுட்பக் குறியீடுகளையே தற்போதைய நான்காம் கட்ட கொள்முதலுக்கும் பின்பற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X