Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் 1 ரூபாய் அரிசி திட்டம் தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி, ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில் இத்திட்டத்தை கருணாநிதி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் 1.86 கோடி ரேஷன்கார்டுதாரர்கள் பலன் அடைவர்.

கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் வென்று திமுக ஆட்சிக்கு வந்ததும், கிலோ அரிசி ரூ. 2க்கு என்ற திட்டம் அமலாக்கப்பட்டது. இப்போது அது மேலும் தளர்த்தப்பட்டு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்ற திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

இந்த நாள் மகிழ்ச்சியான நாள். சோக ரேகை இதயத்தில் படர்ந்தாலும் அதையும் மீறி என்னை ஆளாக்கிய அண்ணா பிறந்து அவரது அறிவை, பணியை, ஆற்றலை நூறு ஆண்டுகள் பயன்படுத்த முடியவில்லை.

ஆனால் அண்ணா வாழ்ந்த 60 ஆண்டுகளில் 600 ஆண்டுகளுக்கான பயனை தமிழகம் பெற்று இருக்கிறது என்ற எண்ணத்தின் காரணமாக மகிழ்ச்சி அடைகிறேன்.

மகிழ்ச்சிக்கு அது மட்டும் காரணம் அல்ல. 60 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் எனது திருமணம் நடந்தது. 60 ஆண்டு கால இல்வாழ்க்கையில் தமிழக மக்களின் வாழ்க்கை நல்வாழ்க்கையாக அமைய கிட்டத்தட்ட 70 ஆண்டு காலம் எழுதியும், பேசியும், பாடுபட்டும், சிறை சென்றும் உழைத்து இருக்கிறேன்.

அதற்கு காரணம் எனக்கு பயன் கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. பெரியாரின் எண்ணங்கள் ஈடேற வேண்டும். அண்ணாவின் கனவுகள், அறிவுரைகள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பாடுபட்டு அதன் விளைவை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பில் ஒன்றுதான் இது.

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பேன் என்று அண்ணன் போதித்த அந்த சிரிப்பை காண, படி அரிசி திட்டத்தை 1967-ல் அறிவித்தார். அவரால் நெடுங்காலம் வாழ முடியாவிட்டாலும் பொருளாதார தட்ப வெப்பம் காரணத்தாலும் நிறைவேற்ற முடியாமல் போனது. அவர் கொண்டு வந்த திட்டத்தை இன்று நிறைவேற்றி வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

அண்ணாவின் கனவில் ஒன்றுதான் சென்னை ராஜ்ஜியத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வைப்பது. அதையும் அண்ணா சூட்டினார். சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாக வேண்டும் என்று குரல் கொடுத்தார். அவரது ஆட்சியில் அதையும் நிறைவேற்றினார்.

தீர்ந்தது அண்ணாவின் ஏக்கம்:

ஆனால் ஒரே ஒரு ஏக்கம் இருந்தது. படி அரிசி திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனதே என்ற ஏக்கம்தான் அது. அண்ணாவின் கனவை இன்று நனவாக்கி இருக்கிறோம்.

தமிழக மக்கள் இந்த திட்டத்தால் மகிழ்ச்சி கண்டும் கூட நம்மை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் சிலருக்கு இல்லை. ஏற்றுக் கொள்வது எதிரிகளுக்கு சாதாரண விஷயமல்ல. மனம் இருந்தால் தான் அந்த பக்குவம் வரும். மனமே இல்லாதவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது.

குறைந்த விலைக்கு அரிசி போடுகிறார். திருட்டு போய் விடும் என்கிறார்கள். ஏன் இந்த சந்தேகம். திருடனுக்கு வர வேண்டிய சந்தேகம் வரலாமா? இன்னும் சொல்கிறார்கள். அரிசி தரமானதாக இருக்காது. கறுப்பாக இருக்கும் என்று.

இது விமர்சனம் அல்ல. பக்கத்து வீட்டில் ஒருவருக்கு அழகான பெண் பார்த்து அழைப்பிதழை கொண்டு கொடுத்ததும், அழைப்பிதழை பார்த்து விட்டு பெண் அவ்வளவாக கலர் இல்லையாமே, கால் கொஞ்சம் ஊனமாமே, என்பார்கள். பெண்ணுக்கு கால் ஊனமோ இல்லையோ இவர் நெஞ்சம் ஊனம்.

எந்த திட்டத்திலும் குறைகள் இருக்கலாம். எல்லாம் நிறைவாக இருக்கும் என்று சொல்ல முடியாது. தேச தந்தை காந்தியே மறு அவதாரம் எடுத்து பிரதமராகவோ, முதலமைச்சராகவோ அமர்ந்தாலும் எல்லாம் நிறைவாக இருக்கும் என்று சொல்ல முடியாது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு சொல்கிறேன். கடவுளே அவதாரமாக வந்து ஆட்சி செய்தாலும் குறைகள் இருக்கும்.

எந்த நல்ல காரியம் செய்தாலும் அதில் குறையை மட்டும் சொல்கிறார்களே என்பதற்காக அந்த திட்டத்தையே விட்டு விட்டால் அதை விட பைத்தியகாரத்தனம் வேறு எதுவும் இருக்காது. திட்டத்தையே குறை கூறுவதை விட அதில் இருக்கிற குறையை சுட்டிக்காட்டுங்கள். குறையை கலைந்து விட்டு நிறைவாக செய்ய முற்படுகிறோம். அதை விட்டுவிட்டு இந்த திட்டமே உருப்படாது, இது தேவையற்ற திட்டம் என்று சொன்னால் அது என்னை சொல்வதாக ஆகாது. அண்ணா அறிவித்த படி அரிசி திட்டத்தை குறை கூறுவதாக ஆகிவிடும்.

அரிசி விலை குறைவு, வாங்கி சாப்பிடுங்கள் என்கிறார் கருணாநிதி. விஷம் கூட விலை குறைவுதான் என்றால் வாங்கி சாப்பிடுவாரா என்று ஒருவர் பேசி இருக்கிறார். விஷத்தை வாங்கி சாப்பிடும் அளவுக்கு இங்கு நிலைமை மோசம் இல்லை.

திமுகவும், கருணாநிதியும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் பார்த்து எதிர்ப்பதற்கு பொறாமையும், அசூயையும்தான் காரணம். உண்மையான விமர்சனம் அல்ல. ஏழை எளியவர்கள், நடுத்தர மக்கள் குடும்பத்தில் செலவுகளை குறைக்க இந்த திட்டம் பயன்படுகிறதா என்பதை எண்ணி பார்க்க வேண்டும். இந்த நல்ல திட்டத்தை தேவையில்லை என்பது நல்லதல்ல, நாட்டுக்கும் நல்லதல்ல. எல்லா கட்சிகளும், எல்லோரும் இந்த திட்டத்தை ஆதரிக்க வேண்டும். ஆதரிக்காவிட்டால் மக்கள் முன் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு விடுவார்கள்.

மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார். அப்போது யாரும் குறை சொல்லவில்லை. அந்த திட்டத்திற்கான வசூலில் சிறுசிறு குறைகள் ஏற்பட்டதை சுட்டிக்காட்டினார்கள். அது திருத்தப்பட்டது. எனது நண்பர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்த போது அதை நான் எதிர்க்கவில்லை. சட்டப் பேரவையில் பேசிய போது இந்த திட்டத்தை இப்படி எல்லாம் நடத்தலாமே என்று ஆலோசனைகள் சொன்னேன். அறிவித்து 3 மாதமாகிறது. அமல்படுத்துவது எப்போது என்று தான் கேட்டேன்.

திமுக அமல்படுத்தியுள்ள இந்த திட்டத்தை குறை கூறுவதற்கு காரணம் திமுக மீது கொண்ட பொறாமை என்பதை புரிந்து கொண்டு எல்லோரும் ஒரே முகமாக இந்த திட்டத்தை ஆதரிக்க வேண்டும். இங்கு பசியை பற்றி அமைச்சர் வேலு எடுத்து சொன்னார். மணிமேகலை காவியங்களை எல்லாம் சுட்டிக்காட்டினார். இன்று மாலை நடைபெறும் கவியரங்கத்துக்கு இப்போதே பீடிகை போட்டுள்ளார். மணிமேகலையிடம் இருந்ததை போல அட்சய பாத்திரம் அரசிடம் வராது. அட்சய பாத்திரங்களாய் அரசின் திட்டங்களை வினியோகிப்பவர்கள் இருந்தால் மக்களின் பசியை போக்கலாம். மகிழ்ச்சியாக வாழ வைக்கலாம்.

இன்று சென்னையில் தொடங்கி வைத்துள்ள இந்த திட்டம் பரவலாக தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். நாளைய தினம் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் அந்தந்த பகுதிகளில் தொடங்கி வைக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். அதன் பிறகு ரேசன் கடைகள் மூலம் வினியோகிக்கப்படும்.

எல்லா மக்களும், எல்லா கட்சியினரும் இந்த நல்ல திட்டத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+