For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நரம்புச் சிலந்தியும்..தீவிரவாதமும்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தீவிரவாதத்தை தீவிர நடவடிக்கையால் மட்டும் ஒழித்து விட முடியாது. தீவிரவாதம் உருவாகக் காரணமான மனித நேயமற்ற, மத வெறி எண்ணங்கள் மாய்க்கப்பட்டால் தான் அதை ஒடுக்க முடியும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக மாணிக்கவேலர் பொறுப்பேற்றிருந்தார்.

ஆழ்ந்த அரசியல் அனுபவம்- மக்கள் பிரச்சினைகளை அக்கறையுடன் அவ்வப்போது அணுகி, அவற்றுக்கு பரிகாரம் காணும் பரிவு- அரசியல்ரீதியாக அவரிடம் மாறுபாடு கொள்பவர்கள் கூட, அன்பு காட்டும் அளவுக்கு அமைச்சர் பதவியில் இருக்கிறோம் என்ற அகந்தை அணுவளவும் இல்லாமல் எல்லோரிடமும் சகஜமாக பழகிடும் பண்பாடு- இவ்வளவு சிறப்பு பெற்றவராகத் திகழ்ந்தவர் என்பதோடு; காமராஜரின் அமைச்சரவையில் ஓர் அமைச்சராக, அதுவும் அவரது நல்லெண்ணத்தைப் பெற்ற அமைச்சராக இருக்கிறார் என்னும் பாராட்டையும் பெற்றவர்.

எதிர்க் கட்சிகளிடமிருந்து சூடாகக் கிளம்பும் கேள்விகளுக்குக் கூட, சுவையான பதில்களை அளித்து சட்டமன்றத்தை கலகலப்பாக்கி விடுவார்.

அவ்வளவு திறமை பெற்றவரையும், அந்த காலத்திலே ஒரு பிரச்சினை திக்குமுக்காட வைத்தது.

"இந்த பிரச்சினை வந்தாலும் வந்தது; பிராணனை வாங்குகிறது'' என்று அமைச்சர்கள் மட்டுமல்ல, அரசு அதிகாரிகள், ஊர்ப் பெரியவர்கள், குறிப்பாக விவசாயப் பெருங்குடி மக்கள்- பெரிதும் சஞ்சலத்தில் ஆழ்ந்தனர். அத்தகைய பிரச்சினை தான் என்ன?

அன்றைய பிரிக்கப்படாத தென்னாற்காடு மாவட்டத்தில் பல கிராமப் பகுதிகளிலும்- வட ஆற்காட்டிலே கூட சில பகுதிகளிலும் பயங்கரமானதும், அதிர்ச்சி தரக் கூடியதும்- பெயர் சொன்னாலே மக்கள் நடுங்கி அலறிடக் கூடியதுமான ஒரு வார்த்தை; புராண காலத்துப் போராட்டங்களில் பேசப்படும் நாகாஸ்திரத்தைப் போலப் பேசப்பட்டது. அந்த வார்த்தை தான் 'நரம்புச் சிலந்தி'.

பாழுங் கிணறுகள், பழைய குட்டை குளங்கள், பாசி பிடித்த நீர் நிலைகள்- இவற்றிலிருந்து இந்த ஆட்கொல்லி நோய் மனிதர்களைப் பற்றும். மரண வாசலில் கொண்டு போய் அவர்களைச் சேர்க்கும்.

அண்ணாவும், நாங்களும் சட்டமன்றத்தில் எதிர் வரிசையில் அமர்ந்திடும் வாய்ப்பு பெற்ற 1960ம் ஆண்டுவாக்கில் கூட இந்த நரம்புச் சிலந்தி நோயை ஒழிக்கும் போராட்டத்தில் மிக மிக வேகமாக அன்றிருந்த காமராஜர் ஆட்சியும், மாணிக்கவேலரது மக்கள் நல்வாழ்வுத்துறையும் ஈடுபட்டது என்பதை அனைவரும் அறிவர்.

நரம்புச் சிலந்தி நோயின் விளைவென்ன? அது பற்றிய விவரம் தான் என்ன? அந்த கிருமிகள் இருக்கக் கூடிய கிணற்று நீரையோ- குளம், குட்டைகளின் நீரையோ- குடித்து விட நேரின்; அந்த ஆபத்தான கிருமி; மனிதனின் உடலுக்குள் நுழைந்து நரம்புகளில் ஒட்டிக் கொண்டு விடும்.

புழு போன்ற- அந்தக் கிருமி, மனித உடலில் ஒட்டிக் கொண்டால்- அதை உடலிலிருந்து இழுப்பதற்கும், வெளியே எடுத்துப் போடுவதற்கும் இயலாதபடி, இழுக்க இழுக்க 'நாக்குப் பூச்சி' போன்ற அந்த சிலந்தி வந்து கொண்டேயிருக்கும்.

அந்த கொடிய புழுவின் கடிக்கு உள்ளானவர்கள், பகல் முழுதும் படாத பாடுபட்டு, இரவில் தூங்கும் போது அந்தப் புழு உடலுக்குள் புகுந்து தசைக்குள் அழுந்திப் புதைந்து விடாமல் எச்சரிக்கையாக இருக்க; அந்த புழுவின் மறு முனையை முடிந்து போட்டுக் கொண்டு தூங்குவார்கள். அவ்வளவு எச்சரிக்கையாக இருந்து, அப்போதும் பயத்தால் நடுங்கிக் கொண்டிருப்பார்கள்.

அந்த விஷப் பூச்சிகளை அழிக்க எத்தனையோ முயற்சிகள், நடவடிக்கைகள், அந்த சமயத்தில்தான் 1967ல் அண்ணா தலைமையில் திமுக ஆட்சியும் அமைந்தது.

காமராஜர் அவர்கள் ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாணிக்கவேலர் துறையின் மூலம் தொடர்ந்த 'நரம்புச் சிலந்தி' ஒழிப்புப் பணியை கழக ஆட்சியும் தொடர்ந்து மேற்கொண்டது.

அண்ணா மறைவுக்குப் பிறகு, முதல்வர் பொறுப்பை ஏற்ற நான், தென் ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவரும், வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்தவருமான ஏ.கோவிந்தசாமியுடன் 'நரம்புச் சிலந்தி' தாக்கிடும் கிராமப் பகுதிகளான பண்ருட்டி, காடாம்புலியூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், புத்தாண்டிக்குப்பம், காட்டுக் கூடலூர், காட்டுப்பாளையம், மேட்டுக் குப்பம், அன்னதானக் குப்பம், முத்தாண்டிக் குப்பம், மருங்கூர் போன்ற ஏராளமான இடங்களுக்குச் சென்று நரம்புச் சிலந்தியால் தாக்குண்ட மக்களைச் சந்தித்து விவரங்கள் அறிந்தோம்.

நரம்புச் சிலந்தியை ஒழித்திட அந்த சிலந்தியோடு நேரடிப் போர் நடத்துவதை விட; அவை உருவாகிடக் காரணமாக இருக்கும்- குளம், குட்டைகள், நீர்நிலைகளைச் சுத்தப்படுத்தி அந்த கிருமிகள் தோன்றுவதற்கே இடமில்லாமல் செய்து விடுவதே- சரியான தீர்வாக இருக்க முடியும் என்பதை புரிந்து கொண்டோம்.

அவ்வழியே செயல்பட்டோம். நரம்புச் சிலந்தி ஒழிவதற்கு நீர் நிலைகள் தூய்மையாவதே முக்கியம் என்பதை உணர்ந்து அம்முறையில் நடவடிக்கை எடுத்தது வெற்றியைத் தந்தது. நரம்புச் சிலந்தி ஒழிந்தது.

இப்போது சிந்திப்போம்; நரம்புச் சிலந்திக்கும் தீவிரவாதச் செயல்களுக்கும் என்ன வேறுபாடு?

இரண்டுமே ஆட்கொல்லி தான். குளம் குட்டைகளில் உருவாகும் அசுத்தம்- அந்த அசுத்தத்தில் அவதரிக்கும் சிலந்திப் புழு - அந்தப் புழு வழங்கும் நோய் தானே நரம்புச் சிலந்தி.

அதை ஒழிக்க முதற் கட்ட 'சிகிச்சை' குளம் குட்டைகளுக்கல்லவா செய்ய வேண்டியிருக்கிறது. அதுபோல - தீவிரவாதத்தை தீவிர நடவடிக்கையால் ஒழித்து விட முடியுமா? அதுவும் தேவை தான்.

ஆனாலும் தீவிரவாதம் உருவாகிடக் காரணமான மனித நேயமற்ற, மத வெறி எண்ணங்கள் மாய்க்கப்பட்டால் தானே நீர் நிலைகள் சுத்தமாகி ஊர்ப் புறங்களில் 'நரம்புச் சிலந்தி' தாக்குதல் நேராமல் இருக்கும்.

மூல காரணத்தை அறிந்து, அதனை முழுமையாக அகற்றினால்தான் சமுதாயம் முன்னேற முடியும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X