கற்பழிப்பு முயற்சி: தேமுதிக நிர்வாகி கைது
நெல்லை: நெல்லை அருகே பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தேமுதிக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
நெல்லை அருகே சுரண்டை அருகே திருச்சிற்றம்பலம் காலனியை சேர்ந்தவர் கைலாசம், விவசாயி. இவரது மகள் முப்புடாதி. பீடி சுற்றும் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த தேமுதிக கிளை செயலாளர் பொன்னுசாமி. மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
முப்புடாதி பீடிக்கடைக்கு செல்லும்போது அவரது பின் தொடர்ந்து சென்று கேலி, கிண்டல் செய்து வந்துள்ளார் பொன்னுசாமி. இந்நிலையில் சம்பவத்தன்று மாலை கைலாசமும், அவரது மனைவியும் வயலுக்கு சென்று விட்டனர்.
முப்புடாதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது குடிபோதையில் அங்கு வந்த பொன்னுசாமி முப்புடாதியின் வீட்டுக்குள் புகுந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். முப்புடாதியை நகத்தால் கீறி காயமேற்படுத்தியுள்ளார்.
இதையடுத்து முப்புடாதி கூச்சலிட்டார். இதுபற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று பொன்னுசாமி மிரட்டிவிட்டு தப்பியோடினார். இதுகுறித்து சாம்பவர் வடகரை போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து போலீஸார் பொன்னுசாமியை கைது செய்தனர். பின்னர் தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பொன்னுசாமி மீது பெண்களை கேலி செய்வது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.