For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புஷ் - மன்மோகன் சிங் சந்திப்பு: பரஸ்பரம் பாராட்டு

By Staff
Google Oneindia Tamil News

Manmohan singh with Bush
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன், பிரதமர் மன்மோகன் சிங் காலை சந்தித்துப் பேசினார். எதிர்பார்த்தது போலவே அணு சக்தி ஒப்பந்தம் இந்த சந்திப்பின்போது இடம் பெறவில்லை. இருப்பினும் இந்த ஒப்பந்தத்திற்காக பாடுபட்டதற்காக இரு தரப்பினரும் பரஸ்பரம் பாராட்டிக் கொண்டனர்.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் தலைநகர் வாஷிங்டனில் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை அவரது ஓவல் அலுவலகத்தில் சந்தித்தார். இரு தலைவர்களும் சுமார் 45 நிமிடங்கள் பேசினர்.

இரு தரப்பு விவகாரங்கள், பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இருப்பினும் அணு சக்தி ஒப்பந்தம் இன்னும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்படாததால் அதுகுறித்து இன்றைய சந்திப்பின்போது எந்த அம்சமும் இடம் பெறவில்லை. இருப்பினும், அணு சக்தி ஒப்பந்தம் உருவாவதற்காக பாடுபட்டதற்காக இரு தலைவர்களும் பரஸ்பரம் பாராட்டிக் கொண்டனர்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு தலைவர்களும் திருப்தி தவழும் முகத்துடன் காணப்பட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் இரு தலைவர்களும் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை.

பிரதமருடன் வெளியுறவு செயலாளர் சிவசங்கர மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், பிரதமரின் சிறப்பு தூதுவர் ஷியாம் சரண், இந்திய தூதர் ரோனன் சென் ஆகியோர் உடன் இருந்தனர். இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் முல்போர்டும் சந்திப்பின்போது உடனிருந்தார்.

சிங் கொடுத்த 'அட்வைஸ்'!

சந்திப்பின்போது ஜார்ஜ் புஷ் பேசுகையில், அணு ஒப்பந்தம் உருவாக நீங்கள் (மன்மோகன் சிங்) கடுமையாக பாடுபட்டீர்கள். அதற்காகப் பாராட்டுகிறேன்.

பல்வேறு உலக விவகாரங்களில் உங்களது அட்வைஸ் எனக்கு பேருதவியாக இருந்தது. அதனால் பல முக்கிய முடிவுகளை எடுக்கவும், கொள்கையை வகுக்கவும் உதவியாக இருந்தது. உங்களது அட்வைஸுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். உங்களுக்கு அருகில் (அண்டை நாடுகள்) என்ன நடக்கிறது என்பதை எனக்குத் தெரியப்படுத்தியதற்காக பாராட்டுகிறேன்.

உங்களது அட்வைஸ் தகவல்பூர்வமாக இருந்தது. அது எனக்கு பெரும் உதவியாக இருந்தது.

தனிப்பட்ட அளவிலும், இரு நாடுகள் என்ற அளவிலும், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நல்லுறவு வலுப்பட்டுள்ளது.

எனது இந்தியப் பயணத்தை (மார்ச் 2006) நான் ஒரு போதும் மறக்க மாட்டேன். இந்தியா எவ்வளவு ஆச்சரியமான நாடு என்பதை எனது நண்பர்களிடம் இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்தியா மிகவும் வலிமையானது, சக்திப்பூர்வமானது, இளமையானது. இந்தியாவின் தொழில் வள வேகம் மிகவும் சிறப்பானது. அத்தகைய வேகத்தை ஏற்படுத்திய உங்களுக்கும் (பிரதமர்), உங்களது அரசுக்கும் நான் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் மன்மோகன் சிங்குடன் வர்த்தகம், சுற்றுச்சூழல், தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து பேசினேன் என்றார்.

இந்தியா -அமெரிக்கா சிறந்த கூட்டாளிகள்:

பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், இந்திய - அமெரிக்க உறவில் பல மாற்றங்கள், பரிணாம வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.

அமெரிக்காதான் இந்தியாவின் மிகப் பெரிய தொழில் கூட்டாளியாகவும், இந்தியாவிலேயே மிகப் பெரிய முதலீட்டாளராகவும் விளங்குகிறது.

அதிபர் புஷ்ஷின் ஊக்கத்துடன், இரு நாட்டு சிஇஓ அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம், இரு நாட்டு வர்த்தக சமுதாயத்தின் உறவும் வலுப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் இந்தியா பல புதிய தொடக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இரு நாட்டு கல்வி சமுதாயத்தையும் இணைக்கும் வகையில், புல்பிரைட்- நேரு ஸ்காலர்ஷிப் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாட்டு அறிவுசார் சமுதாயமும் மேலும் நெருங்கி வரும்.

அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் நிர்வாகம், புவிவெப்ப மாற்றம், சுகாதாரம், அறிவுசார் துறை, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் பல முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2005ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி நானும், அதிபர் புஷ்ஷும் ஏற்படுத்திய அணு சக்தி ஒப்பந்தத்தின் விளைவே இது.

இந்தியாவும், அமெரிக்காவும் சிறந்த கூட்டாளிகளாக விளங்குகின்றன. அனைத்துக்கும் முக்கிய காரணம் அதிபர் புஷ் காட்டிய ஆர்வம் தான்.

செயல்படும் ஜனநாயகம்:

இந்தியா ஒரு செயல்படும் ஜனநாயக நாடாகும். பல கோடி மக்கள் உள்ள, பெருமளவில் வறுமையும் கூடவே உள்ள, இன்னும் பொருளாதார, சமூக வளர்ச்சியை முழுமையாக முடிக்காமல் இருக்கும் ஒரு நாடாகவே இந்தியா உள்ளது.

இதுகுறித்து நானும், புஷ்ஷும் பலமுறை பேசியுள்ளோம். இந்திய ஜனநாயகத்தை மிகவும் மதிப்பதாக புஷ் அத்தனை முறையும் பாராட்டியுள்ளார் என்றார் மன்மோகன் சிங்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X