குழந்தை கொலை: திருச்சியில் கொலைகாரன்?

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி ஆனந்த்- ஷைலா. சென்னை சவுகார்பேட்டையில் வசித்து வருகின்றனர். இவர்களின் இரண்டு வயது மகன் மோனிக்.
இரும்பு பட்டறை நடத்தி வரும் ஆனந்த், வியாபார விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்வார். அவரது உறவினர் ஜூகுனு (34). ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் ஆனந்தின் வீட்டுக்கு அடிக்கடி வருவார். அவருக்கு செலவுக்கு ஆனந்த் பணம் கொடுத்து உதவி வந்தார். வீட்டுக்கு வரும் ஜூகுனு, குழந்தை மோனிக்குடன் விளையாடிக் கொண்டிருப்பார்.
நேற்று முன்தினம் ஆனந்த் வியாபார விஷயமாக மதுரை சென்றிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த ஜூகுனு, ஷைலாவிடம் பணம் கேட்டுள்ளார். ஷைலா பணமில்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜூகுனு, குழந்தை மோனிக்கை கடத்தி சென்றார். அம்பத்தூர் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் குழந்தையை அடித்து கொடூரமாக கொலை செய்தார்.
அதன் பிறகு உறவுக்கார பெண்ணுக்கு போன் செய்து மோனிக்கை கொலை செய்து விட்டதாகவும், டெல்லிக்கு செல்வதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இணை போலீஸ் கமிஷனர் அபய்குமார் சிங் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் கருப்பசாமி மேற்பார்வையில் உதவி கமிஷனர் பாலசந்திரன், இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் தப்பியோடிய ஜூகுனுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஜூகுனுவின் செல்போன் நம்பரை வைத்து விசாரித்தபோது அவர் நேற்று காலை முதல் திண்டிவனம், அரக்கோணம் பகுதிகளில் இருந்தது தெரியவந்தது. நேற்று மாலை அவர் திருச்சியில் பதுங்கி இருப்பதை செல்போன் சிக்னல் மூலம் போலீஸார் உறுதி செய்தனர்.
திருச்சியில் இருந்து சவுகார்பேட்டையில் உள்ள தனது நண்பர் ஒருவருக்கு ஜூகுனு போன் செய்துள்ளார். கொலை செய்த விஷயத்தை கூறி தனக்கு பண உதவி செய்யுமாறும் கேட்டுள்ளார்.
இதை பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட அந்த கூட்டாளியை நேற்று இரவு சுற்றி வளைத்து பிடித்தனர். இரவு முழுவதும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். ஜூகுனு பதுங்கி இருக்கும் இடம் குறித்தும் தகவல் கிடைத்ததை அடுத்து சிறப்பு தனிப்படை போலீஸார் திருச்சி விரைந்துள்ளனர்.
ஷைலா பணம் கொடுக்காதது மட்டுமே இந்த கொலைக்கான காரணமாக இருக்க முடியாது என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். குழந்தையின் பெற்றோரும் மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.