'ஒகேனக்கல்': கர்நாடகா விதண்டாவாதம்: துரைமுருகன்
வேலூர்: ஒகேனக்கல் எல்லை விவகாரத்தில் கர்நாடகாவின் பேச்சு விதண்டாவாதமாக உள்ளதாக பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ஒகேனக்கல் எல்லையை மறு வரையறை செய்ய கோருவது தேவையில்லாத ஒன்று. 1958ம் ஆண்டிலேயே மாநிலங்கள் மொழி வாரியாக எல்லை வரையறை செய்யப்பட்டுவிட்டது. இதை தமிழக, கர்நாடகா அரசுகள் அப்போதே ஏற்றுக் கொண்டுள்ளன. மீண்டும் இப்போது ஒகேனக்கல் எல்லையை மறு வரையறை செய்ய கோருவது விதண்டாவாதம்.
உலக வங்கி உதவியுடன் தமிழகத்தில் உள்ள 8000 ஏரிகள் பகுதி வாரியாக தூர் வாரப்பட்டு வருகிறது. நீர்பிடி பகுதிகளில் பட்டா கொடுக்க கூடாது என்று நீதி மன்றம் தெரிவித்துள்ளது. இதனால் நீர் நிலைகளில் உள்ள ஆக்ரமிப்பை விரைவில் அகற்றும் பணி நடைபெறும்.
திருவள்ளுவர் பல்கலைக்கழக புதிய கட்டடத்திற்கான திட்ட வரைபடம் தயாரிக்கும் பணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால் தாமதம் ஏற்பட்டது. விரைவில் இதற்கான டெண்டர் கோரப்படும் என்றார்.