For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உண்மையான ஆதரவு அளிப்பது யார்?: ஈழத் தமிழர்களுக்கு தெரியும்-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: இலங்கை தமிழர்கள் நன்றாக விஷயம் தெரிந்தவர்கள். உண்மையில் நமக்கு ஆதரவானவர்கள் யார், போலியாக ஆதரவு காட்டுவோர் யார் என்பதெல்லாம் அவர்களுக்கு நன்றாகவே தெரியும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கை அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் நாளை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த போராட்டத்தில் அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளன. திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளை மட்டும் இந்திய கம்யூனிஸ்ட் போராட்டத்திற்கு அழைக்கவில்லை.

இந் நிலையில் இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு திமுகவை அழைக்கவில்லையே?

பதில்: திமுக தொடங்கிய காலம் முதல் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான கட்சி என்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றாக தெரியும். எனவே நம்மை அழைக்க வேண்டாம் என்று நினைத்து இலங்கை தமிழர்களுக்கு எதிராக இதுவரை இருந்தவர்களையும், அரைகுறையாக ஆதரவு அளித்து வந்தவர்களையும் தான் முக்கியமாக இந்த போராட்டத்துக்கு அழைக்க வேண்டும் என்று நினைத்து இருக்கலாம்.

அதனால் என்ன இலங்கை தமிழர்கள் நன்றாக விஷயம் தெரிந்தவர்கள். அவர்களுக்கு உண்மையில் நமக்கு ஆதரவானவர் யார், போலியாக ஆதரவு காட்டுவோர் யார் என்பதெல்லாம் நன்றாகவே தெரியும்.

அவர்களுக்காக ஒரே நாளில் அறிக்கை விடுத்து, அடுத்த நாளே 7 லட்சம் மக்களைத் திரட்டி சென்னையில் பேரணி நடத்திக்காட்டி அவர்களுக்காக போராடிய கட்சி திமுக
என்பதையும், சட்டப் பேரவை உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்த கட்சி திமுக என்பதையும்,

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகவே 1991ம் ஆண்டு ஜனவரியில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது என்பதையும், புதிதாகச் சொல்லி உலகத்திற்கு தெரியவைக்க வேண்டிய அவசியமில்லை.

இந்த பிரச்சனையில் திமுக மற்றும் திமுக ஆட்சியின் நிலை என்ன என்பதை பற்றி சட்டசபையில் நீண்ட உரை நிகழ்த்தி விளக்கியிருக்கிறேன்.

எப்படியோ உண்ணாவிரத பந்தலில் அனைத்து கட்சி தலைவர்கள் கூடும்போது, கடந்த ஏப்ரல் 23ம் தேதி சட்டசபையில் இலங்கை தமிழர்கள் பிரச்சனையை ஒட்டி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

(அந்த தீர்மானம்: இலங்கையில் அமைதியை ஏற்படுத்த, அங்கே மோதலில் ஈடுபட்டுவரும் இரு பிரிவினரிடையே பேச்சு வார்த்தைகளுக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அங்கு அமைதியை ஏற்படுத்த முறையான அரசியல் தீர்வை எட்ட பயனுள்ள பேச்சுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும். குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது).

அரிசி, மளிகை திட்டங்கள்-சவால்:

கேள்வி: ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டம், 50 ரூபாய்க்கு பத்து மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம் போன்றவைகளை சாதாரண ஏழை, எளிய பொதுமக்கள் வரவேற்கின்ற நிலையில்- ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்கள் அந்தத் திட்டங்களுக்கு குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்களே?

பதில்: இந்தத் திட்டங்களுக்கு குறை சொல்கின்ற கட்சிகள் எல்லாம் அடுத்து வரவிருக்கின்ற தேர்தலில் தங்கள் தேர்தல் அறிக்கைகளில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என்று கூறுவதற்குத் தயாராக இருக்கிறார்களா?

திமுக ஆட்சி கொண்டு வந்து விட்டதே என்ற ஆதங்கத்தில் தான் அதற்கு குறை சொல்கிறார்களே தவிர, உண்மையில் அவர்களுக்கு திட்டத்தின்மீது எந்தக் குறையும் இல்லை.

ஜெ.க்கு நன்றி!:

கேள்வி: அதிமுக சார்பிலே ஏற்பாடு செய்து நடத்திய இப்தார் விருந்தில் ஜெயலலிதா பேசும்போது, தனது தலைமையில் ஆட்சி எப்போதெல்லாம் தமிழ்நாட்டில் நடைபெற்றிருக்கிறதோ, அப்போதெல்லாம் எந்தவிதமான மதக் கலவரங்களும் தமிழ்நாட்டில் நிகழ்ந்ததே இல்லை என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்: அதே நிகழ்ச்சியில் பேசிய ஜெயலலிதா ஒரு கட்டத்தில் தன்னை மறந்து, இன்றும் கூட தமிழ்நாடு மத நல்லிணக்கத்திற்கும், ஒற்றுமைக்கும், சகோதர பாசத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்று கூறியிருக்கிறார். இதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் அவர் கூறியது போல, அவர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்திலே மதக் கலவரங்களே நடைபெற்றதில்லையா?

பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு மறுநாள் ஆம்பூரிலே தகராறு, வேலூரிலே தகராறு, வந்தவாசியிலே கலவரம் என்று இப்படி பல இடங்களில் கலவரம் நடைபெற்றதாக செய்திகள் வந்துள்ளன. திருச்சியிலே பெரிய கலவரம்- மேலப்பாளையத்திலே கலவரம்.

கோவையிலே கலகக்காரர்கள் சாலை மறியலிலும் கற்களை எறிதலிலும் கூரைக்கு தீ வைப்பதிலும் ஈடுபட்டபோது கோட்டைமேடு பகுதியிலே வழிபடும் இடங்களிலேயும் வன்முறையிலே ஈடுபட்டதாகவும் நாளேட்டில் செய்தி.

தஞ்சாவூர் மேலத் திருப்பூந்துறை கிராமத்தில் காவல் துறையினர் நான்கு முறை துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். சோழன் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்றை கூட்டத்தினர் சேதப்படுத்த முயன்றபோது காவல் துறையினர் தாக்கினர்.

இன்னும் சொல்லப்போனால் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை பற்றி ஆய்வு செய்வதற்காக பாஜக சார்பாக வாஜ்பாய் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றையே தமிழகத்திற்கு அனுப்பி அறிக்கை பெறச் செய்தார். அதிலே, ஜெயலலிதா ஆட்சியில் கொடூர குற்றங்கள் புரிந்த தீவிரவாதிகள் கண்டுபிடிக்கப்படவும் இல்லை; தண்டிக்கப்படவும் இல்லை. தீவிரவாதிகளுக்கு அதிமுகவினர் துணை நின்றதால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றெல்லாம் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்கள்.

ஜெயலலிதா ஆட்சியிலே தான் இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் பி.ராஜகோபாலன் தாக்கப்பட்டார். யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை அதே ஜெயலலிதா ஆட்சியில், மதுரையில் அவருடைய வீட்டின் முன்பாகவே பி.ராஜகோபாலன் கொலையும் செய்யப்பட்டார்.

ஆர்.எஸ்.எஸ். அலுவலகம்:

ஜெயலலிதா ஆட்சியிலே தான் சென்னையில் சேத்துப்பட்டில் ஆர்.எஸ்.எஸ். தலைமையிடமே வெடி மருந்துகளால் தகர்க்கப்பட்டு, 11 பேர் இறந்தனர். 14.4.1995 அன்று சென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட இந்து முன்னணி மாநிலத் தலைமையிடக் கட்டிடம் சக்தி வாய்ந்த வெடி குண்டுகளால் தகர்க்கப்பட்டதும் ஜெயலலிதா ஆட்சியிலே தான்.

திரைப்பட இயக்குநர் மணிரத்தினம் இல்லத்தில் 10.7.1995 அன்று குண்டு வெடித்த சம்பவம் அம்மையாரின் ஆட்சியிலே தான்.

ஆனால் இவ்வளவையும் மறைத்து விட்டு, ஜெயலலிதா தொடர்ந்து தான் எவ்வெப்போதெல்லாம் தமிழகத்திலே ஆட்சித் தலைவியாக இருந்தாரோ, அப்போதெல்லாம் வன்முறையோ, கலவரங்களோ நடைபெற்றதில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

கேள்வி: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்றைய தினம் பேசும்போது, வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று சிலர் பேசுகிறார்கள். ஆனால், தமிழை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை கடைந்தெடுத்த கயவர்கள் என்று அழைக்கலாமா?'' என்று கேட்டிருக்கிறாரே?

பதில்: தமிழை அழித்துக் கொண்டிருப்பவர்களை அப்படி அழைக்கலாம். அதே நேரத்தில் தமிழை நான் தான் வாழ வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியவாறு, தன்னுடைய பேத்தியை தமிழ்நாட்டுப் பள்ளிகளிலே கூடச் சேர்க்காமல், டெல்லியிலே கொண்டு போய் (மேடேர் டே கான்வென்ட்) என்ற ஆங்கிலக் கல்வி நிலையத்தில் படிக்க வைப்பவர்களை என்ன பெயரிட்டு அழைப்பது என்றும் அவரிடம் தான் கேட்க வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X